உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்க மண்டபம் கட்டுவதில் தீவிரம்

ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்க மண்டபம் கட்டுவதில் தீவிரம்

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வா நகரில், 1973ம் ஆண்டு வீட்டுமனை உருவாக்கப்பட்டது. அப்போது, சமூக நலக்கூடம் கட்ட, 35 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை, ராமன் உள்ளிட்டோர் ஆக்கிரமித்து, போலி ஆவணங்கள் வாயிலாக பட்டா வாங்கினார். இது தொடர்பான வழக்கு, 30 ஆண்டுகளாக நடந்தது. இந்நிலையில், 2020ம் ஆண்டு பட்டாவை ரத்து செய்து, நீதிமன்ற உத்தரவின்படி 2022ல் மாநகராட்சி பெயரில் பட்டா வழங்கப்பட்டது.இந்த இடத்தில், 'ஏசி' வசதியுடன் கூடிய திருமண மண்டபம் கட்ட, தமிழக அரசு 6.97 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதற்கான, பூமி பூஜை கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி, அந்த இடத்தில் நடப்பட்டிருந்த சவுக்கு மரக் கம்புகளை, ஜே.சி.பி., இயந்திரத்தால் அகற்றி, மீண்டும் ஆக்கிரமிக்கும் முயற்சி நடந்தது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தாசில்தார் சரோஜா, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த பெர்னாண்டோ, 82, ஜே.சி.பி., ஓட்டுனர் சாமிக்கண்ணு, 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அரசு சொந்தமான மேற்கண்ட இடத்தை, ராமன், சகாதேவன் உள்ளிட்டோர், கடந்த 2016ல் பெர்னாண்டோவுக்கு முறைகேடாக விற்றது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இது சம்பந்தமாக வழக்கு நடப்பதால், மண்டபம் கட்டும் பணி காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பணியை வேகப்படுத்த, ஒப்பந்த நிறுவனத்திடம் மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது. அதிகாரிகள் தேர்தல் பணியில் இருக்கும்போது, மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி நடந்தால், மண்டபம் கட்டும் பணி காலதாமதம் ஏற்படும் என்பதை உணர்ந்து, இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை