பெருங்குடி, பெருங்குடி மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் மண்டல அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், 189வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் பாபு பேசியதாவது: அதிகாரிகள் நிர்ப்பந்தம்
என் வார்டுக்கு உட்பட்ட, பள்ளிக்கரணை, ஐ.ஐ.டி., காலனி சமூக நலக்கூடத்தில், ஏழை, எளிய மக்கள், தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் நடத்த, அரசு வரையறுத்துள்ள மிகக் குறைந்த கட்டணத்தை வங்கியில் செலுத்தி, வரைவோலை பெற்று மாநகராட்சி கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்கின்றனர்.சமீபத்தில், சமூக நலக்கூடத்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோர், அதற்கான வாடகை கட்டண வரைவோலையை, புழுதிவாக்கத்தில் உள்ள பெருங்குடி மண்டல தலைமை வருவாய் அதிகாரியிடமே கொடுக்க வேண்டும். இல்லையென்றால், சமூக நலக்கூடத்தை பயன்படுத்த முடியாது எனும் நிர்ப்பந்தத்தை மண்டல அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர்.இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர, அவர்களின் நேரத்தையும் வீணடிக்கும் செயல் இது.இவ்வாறு பாபு பேசுகையில், கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.இதைத்தொடர்ந்து, வார்டு 191 அ.தி.மு.க., கவுன்சிலர் லட்சுமி பேசியதாவது: தீர்மானங்கள் நிறைவேற்றம்
என் வார்டில் உள்ள 700 குடும்பத்து மாணவ - மாணவியர், வேறு இடங்களுக்கு சென்றே 9ம் வகுப்பிற்கு மேல் கல்வி பயில்கின்றனர். எனவே, ஜல்லடையன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.தவிர, இங்கு சமூக நலக்கூடம் இல்லை. போதிய இடவசதி உள்ளதால், சமூக நலக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், 185வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஷர்மிளா தேவி பேசியதாவது:எனது வார்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.இதற்கு பதிலளித்து மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளால் தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவர்கள் செய்யும் தவறுகளை, மக்கள் பிரதிநிதிகள் சுமக்கின்றனர்,'' என்றார்.இறுதியாக, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 37 தீர்மானங்களுக்கும், எந்த வார்டு கவுன்சிலரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், அனைத்து தீர்மானங்களும் முழு ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன.