உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் - கோயம்பேடுக்கு எம்.டி.சி.,...4,000 சர்வீஸ்!: வெளியூர் பேருந்துகள் இயக்கத்தில் குழப்பம்

கிளாம்பாக்கம் - கோயம்பேடுக்கு எம்.டி.சி.,...4,000 சர்வீஸ்!: வெளியூர் பேருந்துகள் இயக்கத்தில் குழப்பம்

தாம்பரம்:பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூர் கிளம்பியோருக்காக, கிளாம்பாக்கம் - கோயம்பேடு இடையே நேற்று, 4,000 மாநகர பேருந்து நடைகள் இயக்கப்பட்டன. சரியான வழிகாட்டுதல், போதிய மாநகர பேருந்துகள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டு, நடத்துனர், பயணியரிடையே தகராறு ஏற்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ள வெளியூர்காரர்கள், இரு நாட்களாக அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.இதனால், சமீபத்தில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இரண்டு நாட்களாக கூட்டம் அலைமோதியது.இங்கு, வெளியூர் பயணியருக்கு சரியான வழிகாட்டுதல், போதிய பேருந்துகள் இல்லாததால், குடும்பத்தினருடன் வந்த பயணியர் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். இதனால், நடத்துனர் - பயணியரிடையே தகராறு ஏற்பட்டது.

மோதல்

கிளாம்பாக்கம் அரசு போக்குவரத்து கழக நடைமேடையில், நேற்று முன்தினம் இரவு, முன்பதிவு செய்த பயணியர் மட்டுமே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.முன்பதிவு செய்யப்பட்ட, விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன; விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட கோட்ட பேருந்துகள் வழக்கம்போல், கோயம்பேடு உட்பட தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதை அறியாத முன்பதிவு செய்யாத பயணியர், கிளாம்பாக்கத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் குவிந்தனர்.இதனால், முன்பதிவு செய்யாத பயணியரை, விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏற்ற, நடத்துனர்கள் கெடுபிடி செய்தனர். திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த பயணியர், பேருந்தில் ஏற்றப்படவில்லை.இதனால், நடத்துனர்களுக்கும், பயணியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதேநேரத்தில், சில வெளியூர் பேருந்துகள் கிளாம்பாக்கம் நிலையத்திற்குள் செல்லாமல், ஜி.எஸ்.டி., சாலையிலேயே நிறுத்தி, முன்பதிவு செய்தோரை வரவழைத்து ஏற்றிச் சென்றன.இதனால், பேருந்து ஊழியர்கள் - பயணியர் இடையே தகராறு முற்றி மோதலாகவும் மாறியது. அந்நேரத்தில் பலரும் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.நேற்று காலையில், கூட்டம் குறைந்திருந்தது. ஆனாலும், நேற்று முன்தினம் இரவு போன்று, சில பேருந்துகளில் இதே நிலைமை நீடித்தது.திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, சேலம் பேருந்துகள் அடிக்கடி இயக்கப்பட்டதால், அப்பேருந்து பயணியருக்கு பாதிப்பு இல்லை.ஆனால், கும்பகோணம் பேருந்து போதிய அளவில் இயக்கப்படாததால், பயணியர் ஆத்திரமடைந்து, போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கும்பகோணம் பேருந்து வரும் போதெல்லாம், லக்கேஜ், குழந்தைகளுடன் ஓடி, 'சீட்' பிடிக்க குடும்பத்தினர் அலைமோதினர்.புதுச்சேரி, திருவாரூர் ஆகிய இடங்களுக்கு பல மணி நேரம் பேருந்து இல்லாததாலும், முறையாக வழிகாட்டுதல் இல்லாததலும், குடும்பத்தினருடன் பலர் காத்து கிடந்தனர்.அதேசமயம், முன்பதிவு பேருந்துகள், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதை அறியாத முன்பதிவு செய்த பயணியர், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்தனர்.அவர்கள், பேருந்தை தவறவிடக்கூடாது என்பதற்காக, இங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு எம்.டி.சி., சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 18 - 60 கட்டணத்தில் அப்பேருந்துகள் இயக்கப்பட்டதால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.நேற்று ஒரே நாளில், 4,000 சர்வீஸ், இரு பேருந்து நிலையங்களுக்கு இயக்கப்பட்டன. இது, பயணியர் அலைக்கழிப்புக்கு சான்றாகவே அமைந்துள்ளது.தவிர, கோயம்பேடில் இருந்து, கோட்ட பேருந்துகள் சீரான முறையில் இயக்கப்பட்டதால், வெளியூர் சென்ற பயணியருக்கு பாதிப்பு இல்லை.கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை, ரயில்கள், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் என, 10 லட்சம் பேர், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.

தாம்பரத்தில் தவிப்பு

தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து, தஞ்சாவூர், கும்பகோணத்திற்கு கோட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, போதிய பேருந்து இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்த பயணியருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை முதல், தஞ்சாவூர், கும்பகோணம் செல்வதற்கு ஏராளமான பயணியர் காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு பேருந்து இயக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

என்னென்ன குறைகள்?

ஏ.டி.எம்., இல்லை: மாநகர் பேருந்து செல்லும் வழியில் இரண்டு நடமாடும் ஏ.டி.எம்., வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூர் பேருந்து நிற்கும் இடங்களில் ஏ.டி.எம்., மையம் இல்லாததால், பயணியர் வெகுவாக பாதிக்கப்பட்டனர்உணவு: நிலைய வளாகத்தில் இரு உணவகங்கள் உள்ளன. கொடுக்கும் காசுக்கு ஏற்றபடி தரமான உணவில்லை; விலையும் அதிகம். குறைந்த விலை உணவகங்கள் இல்லாததால் பலரும் பாதிக்கப்பட்டனர்மருத்துவ சேவை: தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மருத்துவர், ஆலோசனை மட்டுமே வழங்குகிறார். மற்ற அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். இலவச மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும்இருக்கை: வெளியூர் பேருந்து நிறுத்தும் பகுதியில், குறைவான இருக்கைகளே உள்ளன. மாநகர பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளில், ஒரு இருக்கை வசதி கூட இல்லைபேருந்து: மாநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வெளியூர் பேருந்து நிற்கும் இடத்திற்கு 1 கி.மீ., துாரம் உள்ளது. இதற்கிடையே குறைந்த எண்ணிக்கையில் சிற்றுந்து, பேட்டரி கார்கள் இயக்கப்பட்டதால், பெரும்பாலான பயணியர் நடந்து செல்ல சிரமப்பட்டனர்.

நடைமேம்பாலத்துக்கு நடவடிக்கை

வண்டலுார், ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இந்த ரயில் நிலையத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்க நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.இதற்காக, ஜி.எஸ்.டி., சாலைக்கும், ரயில் பாதைக்கும் இடையில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.ஒருங்கிணைந்த சென்னை பெருநகர் போக்குவரத்து குழுமமான கும்டா, இதற்கான பணிகளை துவக்கியது. இதற்காக, இங்கு, 63,507 சதுர அடி நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.இந்த நிலங்களை பரிமாற்றம் செய்வதற்கும், வில்லங்கம் ஏற்படுத்துவதற்கும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. உரிமையாளருக்கு இதில் ஏதேனும் மறுப்புரை இருந்தால், இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதில் இருந்து, 60 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜன 17, 2024 00:35

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்பு நிறையவருவதால், தமிழக அரசு, அந்த இடத்தில் கருணாநிதி பெயரில் ஒரு நூலகம் அமைப்போம். அங்கே கருணாநிதிக்கு ஒரு 108 அடி உயரத்தில் ஒரு சிலையும் வைப்போம்.


lana
ஜன 15, 2024 15:11

koyambedu அருகே உள்ள நிலம் விற்று முடிந்தது. இனி kilaambaakkam அருகே g சதுரம் மூலம் நிலம் விற்பனை. அடுத்து chengalpattu அடுத்து என்று trichy வரை Chennai வளர்ந்து விடும்


அப்புசாமி
ஜன 15, 2024 11:50

தத்தி அரசாங்க. அவிங்களோட சேந்து தத்திகளாக மாறிவிட்ட அதிகாரிகள். இவிங்களை நம்பி ஓட்டுப் போட்ட தத்தி மக்கள். கிளாம்பாக்கம் ஆட்டை முடிஞ்சபின் திண்டிவனத்தில் சென்னைக்கான பெரிய்ய்ய்ய்ய்ய்ய பஸ்ஸ்டாண்ட் கட்டி அங்கேருந்து சென்னைக்கு பஸ் உடுவாங்க.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை