| ADDED : பிப் 13, 2024 12:40 AM
சென்னை, 'சோழவரம் அருகே இரு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றும்படி டி.ஜி.பி.-,க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.சென்னை, பாடியநல்லுாரைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் பார்த்திபன், கடந்தாண்டு வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சண்டே சதீஷ், முத்து சரவணன் ஆகியோர் தலைமறைவாகினர்.சோழவரம் அருகே பதுங்கி இருந்த இவர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை என்கன்வுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த என்கவுன்டரில் சந்தேகம் உள்ளதால், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, இறந்த ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், 'இந்த வழக்கை, ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றும்படி பரிந்துரைத்து, கடந்த மாதம் 18ல் டி.ஜி.பி.,-க்கு ஆவடி போலீஸ் கமிஷனர் கடிதம் அனுப்பியுள்ளார்.அதற்கு டி.ஜி.பி.,-யிடம் இருந்து பதில் வரவில்லை என்பதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும்' என்றார். இதை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை மார்ச் 11க்கு தள்ளிவைத்தார்.