உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மார்டின் வீடு, அலுவலங்களில் மீண்டும் ரெய்டு

மார்டின் வீடு, அலுவலங்களில் மீண்டும் ரெய்டு

சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர்.கோவை துடியலுார் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் வசிப்பவர் மார்ட்டின், 53; லாட்டரி அதிபர். தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை உள்ள நிலையில், நாட்டின் வேறு பல மாநிலங்களில் அரசுடன் ஒப்பந்தம் போட்டு, லாட்டரி தொழில் நடத்துகிறார்.

மோசடி

'லாட்டரி கிங்' என்றே இவரை சொல்கின்றனர். தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கட்சிகளுக்கு, 1,300 கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்கி உள்ளார். சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து, 910 கோடி ரூபாய் வரை சம்பாதித்து உள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான விசாரணையில் மார்ட்டினும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.அதன் அடிப்படையில், மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரி அதிகாரிகள், 2019ல் சோதனை நடத்தினர்; முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மோசடியில் சம்பாதித்த பணத்தை, 40 நிறுவனங்களில் முதலீடு செய்ததும் தெரிய வந்தது. பணம் கைமாறியது ஊர்ஜிதமானதால், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, இரண்டு நாள் சோதனை நடத்தி, 457 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினர்.

7.25 கோடி ரூபாய்

இதற்கிடையே, சென்னை நங்கநல்லுாரில் நாகராஜன் என்பவர் வீட்டில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய போது, 7.25 கோடி ரூபாய் சிக்கியது. இது, மஹாராஷ்டிரா, கேரளாவில் லாட்டரி சீட்டு விற்றதால் கிடைத்த தொகை என்றும், மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்றும் நாகராஜன் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் மார்ட்டின், லீமா ரோஸ் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமலாக்க துறையும் உள்ளே வந்தது. அடுத்த ஆறேழு மாதத்தில் ஒரு திருப்பம் நேர்ந்தது. நங்கநல்லுாரில் நாகராஜனிடம் கைப்பற்றிய பணம் சம்பந்தமாக எந்த முறைகேடும் நடக்கவில்லை என, அதே மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆலந்துார் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தனர். நீதிபதியும் அதை ஏற்று, மார்ட்டின், லீமா ரோஸ் மீதான வழக்கை ரத்து செய்தார்.

உத்தரவு

அதை எதிர்த்து, ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை அப்பீல் செய்தது. ஆலந்துார் நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட், மார்ட்டின் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், அமலாக்கத் துறையும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.அதன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கோவை துடியலுாரில் உள்ள மார்ட்டின் பங்களா, ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 'மார்ட்டின் மில்ஸ் ஆப் கம்பெனி இன்ஸ்டிடியூஷன்' என்ற கார்ப்பரேட் அலுவலகம் போன்றவற்றில் சோதனை நடத்தினர்.

ஆவணங்கள்

மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா வீடு, சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தினர். ஆதவ் அர்ஜுனா, தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலராக உள்ளார்.திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், மார்ட்டினுக்கு சொந்தமான, 'டிவி' நிறுவனம், ஹரியானா மாநிலம் பரிதாபாத், பஞ்சாபில் உள்ள லுாதியானா, மேற்கு வங்கத்தில் கோல்கட்டா நகரில் உள்ள மார்ட்டின் குடும்பத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

spr
நவ 15, 2024 21:53

இவர்கள் எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை. அனைத்துத் துறையினரும் ஏதோ ஒருவகையில் இவர்களால் வாங்கப்பட்டவர்களாக இருப்பதால் "நாங்கள் தண்டிக்கப்பட முடியாதவர்கள்" என்று அவர்களது வலிமையைப் பறைசாற்ற ஒரு வாய்ப்பாகவே இதனை அவர்கள் நினைக்கிறார்கள்.


Vijay D Ratnam
நவ 15, 2024 17:59

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூட்டணியில் இருந்துகொண்டே குடைச்சல் கொடுத்தால் பிஸ்னஸ் டீலிங்ஸ், ஷேர் செட்டில்மெண்ட்ஸ், கமிஷன்ஸ் கரெக்ட்டா பெறும் டெல்லி பார்ட்னர் எப்படி பொறுத்துக்கொள்வார். அதான் ரெயிடு. பாஜக திமுக கள்ள உறவு வெட்டவெளிச்சம் ஆகிறது. சொம்மாவா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூவா அளவுக்கு கொள்ளையடித்து கையும் களவுமாக சிக்கி ஜெயிலில் ராசாவோடு கிடந்த கனிமொழி அமித்ஷா கூட்டணி கடந்த உறவு வேலையை காட்டுது.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 15:18

அமித் ஷா மற்றும் கனிமொழியின் இடையே இருக்கும் நல்ல புரிதலுக்கு மேலுமொரு எடுத்துக்காட்டு .....


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 15:17

திமுக அவரால் அதிகம் பலனடைந்துள்ளது ....... ஆகவே இங்கே திமுக அடிமைகளின் கதறல் அதிகமிருக்கும் ..... அவர்களுக்கு கிடைக்கும் ஓசி குவார்ட்டர், பிரியாணிக்கும் பாஜக வேட்டு வைக்கக் கூடாது .... கருணை காட்டணும் ...


Palanisamy Sekar
நவ 15, 2024 11:52

இதனை செய்ய தூண்டியதே ஆளும் திமுக என்கிறார்கள். காரணம் சும்மா கிடந்த திருமாவை ஆட்சியில் பங்கு என்று தூண்டிவிட்டதே ஆதவ் அர்ஜுனா என்கிற கடுப்பில் திமுகவின் தூண்டுதலாலேயே இது நடந்துள்ளதாக கூறுகின்றார்கள். மேலும் சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் ஆதவ் அர்ஜுனா மேடைக்கு வரும்போது தொண்டர்கள் பலரும் ஏகத்துக்கு வரவேற்பு கோஷம் எழுப்பியதை கண்ட விசிகாவின் இரண்டாம் கட்ட தலைகளுக்கு எரிச்சல் அளவிளமுடியாத அளவுக்கு வந்ததால் திமுக தொல்லைகளிடம் சொல்லி இது நடந்ததாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தோர். திருமா மீது தொண்டர்களுக்கு இருந்த செல்வாக்கு ஆதவ் வந்த பிறகு சடசட என்று சரிந்ததாக கூறுகின்றார்கள் கட்சியினர். திருமா ஏகத்துக்கு குனிந்து போகிறார் என்கிற எண்ணம் தொண்டர்களிடையே வந்துவிட்டதாகவே கூறுகின்றார்கள். தலைமைக்கு ஆதவ் அர்ஜூனாவே பொருத்தமானவர் என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்துவிட்டது. அதன் பயத்தின் வெளிப்பாடுதான் இதுபோன்ற சோதனைகள் என்பதை மறுக்க முடியாது . ஏன் திருமா மட்டுமே தலைமைக்கு இருக்கவேண்டும் என்பது சட்டமா என்ன? ஆதவ் கிட்ட நிறைய பணம் இருக்குதும் அதனால் அவரால் கட்சியை சுலபமாக கைப்பற்ற முடியும். உறுதியான கொள்கையை உடையவராகவே இருக்கின்றார் ஆதவ். திருமா கூழைக்கும்பிடு போட்டே கட்சியை அடிமைத்தனமாக வைத்துள்ளார் என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு ஒரு மனக்குறை உள்ளதை மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. மேலும் திமுகவின் பணப்புள்ளி மருமகனை விட்டு விலகி வந்ததால் டெல்லி செல்வாக்கில் இதனை செய்துள்ளார்கள். இதுபற்றி கனிமொழிக்கு நன்கு தெரியும் என்கிறார்கள். எப்படியாயினும் இதற்கு திருமாவின் அமைதியானது ஓரளவுக்கு இங்கே சொன்னதெல்லாம் உண்மைதான் என்பது இன்றைய அரசியல். ஆதவ் எதிர்கால விசிக வின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை தவிர்க்க முடியாது.


வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 11:21

காமெடிகள் ஆரம்பம். பாஜகவிற்குத் தெரிந்தது மூன்று அரசியல்கள். 1. கட்சியை உடைத்து கூட்டணி 2. MP, MLA விலைக்கு வாங்குவது 3. ரெயிடு வுடறது. அவ்வளவு தான்.


ஆரூர் ரங்
நவ 15, 2024 10:57

கருணாநிதி கதை வசனம் எழுதிய இரண்டு படங்களைத் தயாரித்தவர் இந்த மார்ட்டின். மேலும் திமுக வுக்கு 550 கோடி தேர்தல் நிதி அளித்தார். இத்தனைக்கும் அவர் பர்மா ( மியான்மர்) விலிருந்து அகதியாக வந்தவராம். உலகின் பணக்கார அகதி.


Premanathan S
நவ 15, 2024 09:26

வெட்டிவேலை


Dharmavaan
நவ 15, 2024 08:44

மார்ட்டின் அதிக தேர்தல் நிதி திருட்டு திமுகவுக்கு கொடுத்தவன் மத்திய குற்ற பிரிவும் திமுக கொத்தடிமையாகி விட்டதா


Velan Iyengaar
நவ 15, 2024 07:56

இப்போ தேர்தல் பத்திரத்தயும் உச்ச நீதிமன்றம் தடை செய்துவிட்டது ....வெளியே தெரியாம என்ன வாங்கி இதை அமுக்கிடுவாங்க என்பது வாங்குறவனுக்கும் கொடுக்குறவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகிடும். பலநூறு கோடி மதிப்பிலான தேர்தல்பத்திரம் முன்னாடி கொடுத்தபிறகு வேறு எதையாவது கொடுப்பதாக சொல்லி ஏமாத்திட்டாரு போல.. அதுதான் அறுபடி விசிட் அடிக்கிறாங்க ......


சமீபத்திய செய்தி