உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறைக்க, இறைக்க சூழ்ந்த மழைநீர்; 400க்கும் மேற்பட்ட இடத்தில் வெள்ளம்

இறைக்க, இறைக்க சூழ்ந்த மழைநீர்; 400க்கும் மேற்பட்ட இடத்தில் வெள்ளம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், 400க்கும் மேற்பட்ட இடங்களில், மழைநீர் தேங்கியுள்ளது. 990 மோட்டார்கள் வைத்து நீரை உறிஞ்சினாலும், தொடர் மழை மற்றும் கூவம் ஆற்றில் நீர் மெதுவாக உள்வாங்குவதால், பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று முன்தினம், 4.6 செ.மீ., நேற்று மாலை வரை, 10.4 செ.மீ., மழை பெய்தது. இரண்டு நாட்களில், 15 செ.மீ., அளவு வரை மழை பெய்துள்ளது.'சென்னையில் 15 செ.மீ., மழை பெய்தாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது' என, அரசு தெரிவித்தது. ஆனாலும், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பிறகும், 400க்கும் மேற்பட்ட இடங்களில், கால் முட்டி அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

இதற்கு, கூவம் ஆற்றில் நீர் உட்புகுந்து செல்லாதது பிரதான காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான வடிநிலப் பகுதியாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலை ஆறுகள் உள்ளன. இவற்றில் கூவம் ஆற்றில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் கட்டுமான கழிவு கொட்டப்பட்டது. அவற்றை அகற்றுவதில் நீர்வளத்துறை, மாநகராட்சி அலட்சியம் காட்டின. பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குபின், அவசரம் அவசரமாக கூவம் ஆற்றில் கட்டட கழிவு அகற்றப்பட்டது. ஆனால், அவை முழுமையாக அகற்றப்படவில்லை. நீரோட்டத்தை தடுக்க கூடிய பெரிய கற்கள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட நிலையில், கரையோரங்களில் இருந்த மேடுகள் மட்டுமே அகற்றப்பட்டன. இதனால், மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறும் நீர், கூவம் மற்றும் அதன் கிளை கால்வாய்களில் உள்வாங்காமல், சாலையிலேயே தேங்குவதாக மாநராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில், 19,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மண்டல மற்றும் வார்டு அளவிலும் புகார்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு ஏற்படுத்த, சுழற்சி முறையில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தாழ்வான பகுதிகளில், 990 மோட்டார்கள் அமைக்கப்பட்டு, நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையால், அப்பகுதியில் நீரை அகற்றுவது சவலாக உள்ளது. தாழ்வான பகுதிகளில், 89 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 300 நிவாரண மையங்களில், பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் போதிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கிய ஒவ்வொரு இடத்திலும், சராசரியாக 1,500 பேருக்கு உணவுகள் வழங்கப்படுகிறது. இதற்காக, மாநகராட்சி 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.கூவம் ஆற்றில் நீர் உள்வாங்குவது மெதுவாக உள்ளது. அதேபோல், முகத்துவாரங்களிலும் கடல் அலைகளால், மழைநீர் உள்வாங்குவதில் சிரமம் உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மழைநீர் வடிகால் இருக்கும் பகுதிகளிலும், மழைநீர் தேங்கி வருகிறது. ஆனாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரு மணி நேரம் போதும்!

சென்னையில் விடாது பெய்து வரும் மழையில், அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரு மணி நேரம் மழை பொழிவு நின்றால், சாலை, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படும்.

- ஜெ.குமரகுருபரன், கமிஷனர், சென்னை மாநகராட்சி

வெள்ளத்தில் குப்பை சேகரிப்பு

வெள்ள தேங்கும் பகுதியில், கழிவுநீர் கலப்பு, குப்பை சேர்வதால், சுகாதார பிரச்னை அதிகரிக்கும். இதனால், மாநகராட்சி, குடிநீர் வாரியம் இணைந்து சுகாதார நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன. பேட்டரி வாகனங்களில் செல்ல முடியாவிட்டால், நகரும் சிறிய தொட்டிகளை கொண்டு சென்று குப்பை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வடிகாலுடன் இணைத்துள்ள சாலை சல்லடை, வடிகால், கால்வாய்களில் சேரும் குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.

கைகொடுத்த மெட்ரோ ரயில்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்நிலையால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் மழை பெய்தது. இதனால், சில இடங்களில் மரங்கள் விழுந்தன. சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால், மாநகர பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. ரயில்பாதையில் மழைநீர் தேங்கியதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில்கள் பாதிப்பின்றி இயக்கப்பட்டன. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில், மழைநீர் தேங்கியதால், பயணியர் வந்து செல்வதில் சிரமப்பட்டனர். 'முழு அளவில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மெட்ரோ ரயில்களை குறைக்காமல் இயக்கி வருகிறோம்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைநீர் புகுந்த வீட்டில் சிக்கிய மூதாட்டியை மீட்ட போலீஸ்

வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, ராமாபுரம் ராயலாநகர் மூன்றாவது பிரதான சாலையில் உள்ள வீட்டில், நேற்று மழைநீர் புகுந்தது. அந்த வீட்டில் தங்கியிருந்த மூதாட்டி பிரபாவதி, 85, அவரது மகன் தினேஷ் குமார், 35 ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, முதல் தளத்தில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த மூதாட்டியை, வளசரவாக்கம் போலீசார் தோளில் சுமந்து, ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்று, ராயலா நகர் முதல் பிரதான சாலையில் உள்ள நிவாரண முகாமில் சேர்த்தனர்.

தண்டவாளம் மூழ்கியதால் புறநகர் ரயில்கள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று இரவிலும் நீட்டித்தது. மிதமானது முதல் கன மழை வரை தொடர்ந்ததால், சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை நேற்று பாதிக்கப்பட்டது. குறிப்பாக, எழும்பூர் - பூங்கா, பல்லாவரம் - தாம்பரம், பரங்கிமலை, திருவொற்றியூர், கொருப்பேட்டை, அம்பத்துார், ஆவடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட, 10 இடங்களில் தண்டவாளம் மூழ்கியது. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. பயணியர் வருகை குறைவாக இருந்ததால், வழக்கத்தை விட குறைவான சேவைகளே இயக்கப்பட்டன. எழும்பூர் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கியதால், மோட்டார் பம்ப் வாயிலாக வெளியேற்றப்பட்டது. பல்லாவரம் அருகே சிக்னலில் கோளாறு காரணமாக, ரயில்களின் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.ேசின்பாலம் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், பேசின் பாலம் கால்வாயில் தண்ணீர் அதிகரிக்க துவங்கியுள்ளதால், அனைத்து மின்சாரம், விரைவு ரயில்களும் 45 நிமிடங்கள் கால தாமதமாக செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மழை அதிகரித்தால், அனைத்து ரயில்களும் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.ரயில் இயக்கம் குறித்து பயணியர் அறிந்து கொள்ள 044 - 2533 0952, 044 - 2533 0953 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ