சென்னை, 'சென்னை மாநகராட்சியின் விளையாட்டு திடல்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதால், ஆண்டுக்கு 1.08 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சியில், 32 டென்னிஸ் உள் அரங்கம், 23 பேட்மின்டன், 18 ஸ்கேட்டிங், 2 டேபிள் டென்னிஸ் திடல் என, 75 விளையாட்டு திடல்கள் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில், விளையாட்டு திடல்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பின் தனியார் ஒப்பந்ததாரர், மாநகராட்சியிடம் ஒப்படைத்தார். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, மாநகராட்சி பராமரித்து வருகிறது. ஆனால், விளையாட்டு திடல்களை, அந்தந்த உள்ளூர் அரசியல்வாதிகள் ஆக்கிரமித்து, கட்டணம் வசூலித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பராமரிப்பு பணிகளை மாநகராட்சியே மேற்கொள்வதால், கூடுதல் செலவும் ஆகிறது.இவற்றை தவிர்க்கவும், மாநகராட்சி விளையாட்டு திடல்கள் வாயிலாக வருவாய் ஈட்டும் வகையிலும், 75 விளையாட்டு திடல்களையும் தனியாரிடம் ஒப்படைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி விளையாட்டு திடல்களை பொறுத்தவரையில், ஒவ்வொரு திடலுக்கும் ஏற்ப, ஆண்டு மதிப்பீடு மாறுபடும். அந்த வகையில், டென்னிஸ் திடலுக்கு குறைந்தபட்சம் 1.50 லட்சம் முதல், 4.50 லட்சம் ரூபாய் வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், பேட்மின்டனுக்கு குறைந்தபட்சம் 1.35 லட்சம் ரூபாய். அதிகபட்சம் 4.05 லட்சம் ரூபாயாக உள்ளது.ஸ்கேட்டிங் திடல் ஒவ்வொன்றும் தலா 96,000 ரூபாய்; டேபிள் டென்னிஸ் திடலுக்கு 1.35 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம், விரைவில் வெளியிடப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.