சைதாப்பேட்டை: ஆட்டோவில் வைத்து செவிலியரிடம் தாலி செயின் திருடிய, உடன் பணிபுரியும் மற்றொரு செவிலியரை, போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசிப்பவர் தங்கம்மாள், 38. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். கடந்த 15ம் தேதி பணியில் இருந்தபோது, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று ஓய்வு எடுக்க, வீட்டுக்கு ஆட்டோவில் புறப்பட்டார். துணைக்கு உடன் பணிபுரியும், சைதாப்பேட்டையை சேர்ந்த நான்சி நிஷா, 37, என்ற செவிலியரை அழைத்து சென்றார். வீட்டுக்கு சென்றதும், ஆட்டோ ஓட்டுநர் புறப்பட்டார். அப்போது, தங்கம்மாள் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின் மாயமானது தெரிந்தது. நான்சி நிஷாவிடம் விசாரித்தபோது, 'என்னுடைய நகையையும் காணவில்லை' என்றதுடன், ஆட்டோ ஓட்டுநர் நகையை திருடி விட்டார் என கூறினார். புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார், ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தனர். அவர் மறுத்ததால், மருத்துவமனையில் இருந்து வீடு வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோ ஓட்டுநர் எங்கும் ஆட்டோவை நிறுத்தவில்லை என்பது தெரிந்தது. சந்தேகத்தின்பேரில், நான்சி நிஷாவிடம் விசாரித்தனர். அப்போது, நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மிகவும் சோர்வாக இருந்த தங்கம்மாள், ஆட்டோவில் நான்சி நிஷா மடியில் துாங்கியபோது, தாலி செயினை திருடியதாக நான்சி நிஷா கூறினார். நேற்று, நான்சி நிஷாவை கைது செய்த போலீசார், பெரம்பூரில் அடமானம் வைத்திருந்த நகையை பறிமுதல் செய்தனர். இவர், மேலும் இரண்டு செவிலியர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்று, சைதாப்பேட்டை பாலம் அருகே மயக்கமடையச் செய்து, 20 சவரனுக்கு மேல் பறித்ததாகவும் கூறப்படுகிறது. அது பற்றியும் நான்சியிடம் விசாரணை நடக்கிறது.