உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டி அட்டகாசம் லாரி உரிமையாளர்களை பிடிக்க உத்தரவு

நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டி அட்டகாசம் லாரி உரிமையாளர்களை பிடிக்க உத்தரவு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, புறநகர் பகுதிகளில் நேற்று, கிராம சபைக் கூட்டம் நடந்தது. முடிச்சூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். சி.எம்.டி.ஏ., மற்றும் ஒன்றிய பொது நிதி, 2.36 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்பட உள்ளதை அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது, 'அணுகு சாலையில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் இடத்தில், விவசாய நிலத்திற்கு செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என, கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள், பதில் கூறாமல் மழுப்பினர். தவிர, 2008ல் முடிச்சூர் பகுதியில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில், மேய்க்கால் புறம்போக்கு இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாக்களை, அடங்கலில் ஏற்றாதது குறித்து, பொதுமக்கள் கேட்ட கேள்வியை, வருவாய் துறையினர் கண்டுகொள்ளவில்லை.பரங்கிமலை ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில், காலை 10:00 மணிக்கு துவங்கிய கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் சுஹாசினி தலைமை வகித்தார். இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், 20க்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள்.ஊராட்சியில் விரைந்து முடிக்கப்பட வேண்டிய 11 பணிகளை அவர்கள் பட்டியலிட்டு, தலைவரிடம் வழங்கினர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் சிறு, குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கழிவுநீர் டேங்கர் லாரிகள், கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள கால்வாய், பொது இடங்களில் கொட்டி அட்டகாசம் செய்வதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்தனர்.இதை கேட்ட அமைச்சர் அன்பரசன், மாங்காடு காவல் நிலைய ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டு, ''நீர்நிலையில் கழிவுநீர் கொட்டும் லாரியின் உரிமையாளரை கைது செய்யுங்கள்.''அலட்சியம் காட்டினால் உங்கள் மீது மேலிடத்தில் புகார் அளிப்பேன்,'' என்றார்.

அமைச்சர் பதிலால் சலசலப்பு

செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியம், நன்மங்கலம் முதல்நிலை ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் சுப்பிரமணியன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பெண் ஒருவர், 'மழை வெள்ளப் பாதிப்பின் போது, இந்திரா நகர் மூழ்கியது. அங்கு கால்வாய் வசதி இல்லை. மழைநீர் சூழ்ந்த போது எங்கள் பகுதிக்கு ஊர் தலைவரோ, வார்டு உறுப்பினர்களோ எட்டி கூட பார்க்கவில்லை' என முறையிட்டார். அதற்கு அமைச்சர், தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டக்கூடாது என்றார்.தொடர்ந்து பேசிய அந்த பெண், 'ஓட்டு கேட்க மட்டும் வந்து விடுகிறார்கள்; குறைகளை கேட்க வருவது இல்லை' என ஆதங்கப்பட்டார். அப்போது அமைச்சர், ''நீ ஓட்டுப்போட வேண்டாம்; பெட்டியில் பூட்டி வைச்சுக்கோ'' என, கூறினார்.ஓட்டு அளிப்பது நம் ஜனநாயக கடமை என, தேர்தல் கமிஷன் பிரசாரம் செய்து வரும் நிலையில், அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இறுதியாக, நிருபர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், ''கிராம சபை கூட்டத்தில் கலவரம் செய்வதற்காகவே சிலர் வருகின்றனர். ஒரு வார்டு உறுப்பினர், அந்த வார்டில்தான் இருப்பார். அவர் வார்டு பக்கம் வருவதே இல்லை என கூறியதால் அப்படி கூறினேன். தவிர, ஓட்டளிப்பதை தடுப்பதற்காக கூறவில்லை,'' என்றார்.

சட்டம் தேவை

கோவிலம்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஊராட்சியில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூட வேண்டும், 2021 தேர்தல் அறிக்கையில் தி.மு.க., வழங்கிய வாக்குறுதிப்படி,- சேவை உரிமை சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி, 'தமிழ்நாடு சேவை உரிமை ஆணையம்' அமைக்க வேண்டும் உட்பட 20க்கும் மேற்பட்ட கோரிக்கை அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஏகனாபுரத்தில் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் ஊராட்சியில், நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தை, கிராம மக்கள் புறக்கணிப்பு செய்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏகனாபுரம் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், 'பரந்துாருக்கு விமான நிலையம் வேண்டாம்' என, கோஷம் எழுப்பினர். விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்தாவது முறையாக அவர்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை