உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரங்கையே வீணை நரம்புகளால் கட்டிப்போட்ட பார்த்தசாரதி

அரங்கையே வீணை நரம்புகளால் கட்டிப்போட்ட பார்த்தசாரதி

தொன்மையான இசைக்கருவிகளுள் வீணையும் ஒன்று. வீணையால் நீண்ட நெடிய இசை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் வித்வான் ஆர்.பார்த்தசாரதி.இவரது கச்சேரி, மயிலை ராகசுதா ஹாலில் நடந்தது. மிருதங்க வித்வான் சேர்த்தலை அனந்தகிருஷ்ணனும், கடம் வித்வான் என்.குருபிரசாத்தும் அவருடன் கைகோர்த்திருந்தனர்.மனம் கவரும் கமாஸ் ராகத்தில் ஆலாபனை செய்து, எச்.என்.முத்தையா பாகவதர் ஆதி தாளத்தில் இயற்றிய, 'மாத்தே மலையத்வஜ' என்ற கீர்த்தனையை இசைத்தார். த, த, எனத் துவங்கும் சிட்டை ஸ்வரங்களை இசைத்தது ரசிக்கும்படி இருந்தது.தொடர்ந்து, விநாயகனை போற்றி, கவுளை ராகத்தில் மிஸ்ர சாபு தளத்தில் அமைந்த முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, 'ஸ்ரீ மஹா கணபதி' என்ற கீர்த்தனையை இசைத்தார். அதில், கற்பனை ஸ்வரங்களை இசைத்து, அழகு சேர்த்தார்.பேகடா ராகத்தில் நீண்ட ஆலாபனை இசைத்து இன்புறச் செய்தார். பின், சுப்பராய சாஸ்திரி இயற்றிய ரூபக தாளத்தில் அமைந்த, 'சங்கரி நீவே' என்ற கீர்த்தனையை இசைத்தார்.நடராஜப் பெருமானை போற்றி, பூர்வி கல்யாணி ராகத்தில், ரூபக தாளத்தில் அமைந்த, 'ஆனந்த நடமாடுவார் தில்லை' என்ற கீர்த்தனையை இசைத்தார்.பூச்சி சீனிவாச அய்யங்கார் இயற்றிய கேதார கவுளை ராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்த, 'சரகுண பாலிம்ப' என்ற கீர்த்தனையை இசைத்து, கற்பனை ஸ்வரங்களால் அரங்கெல்லாம் நிறைந்தார்.தொடர்ந்து, மிருதங்க வித்வானும், கடம் வித்வானும் அவர்களின் தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்தனர். வாசிப்பின் தனித்துவம் தலையாட்டச் செய்தது. 'ததொம் தொம்ததொம்' என்ற இசைக்கோர்வை, பாடலுக்கு பொருத்தமாக அமைந்தது.பின், ராகவேந்திர சுவாமிகளை போற்றும் வண்ணம், 'துங்கா தீரவிராஜம்' என்ற பாடலை இசைத்து, சுவாமியை அனைவர் மனதிலும் நிற்க வைத்தார்.வியாசரய்யா இயற்றிய மிஸ்ரசாபு தாளத்தில், யமுனா கல்யாணி ராகத்தில் அமைந்த, 'கிருஷ்ணா நீ பேகனே' என்ற புகழ்பெற்ற பாடலை இசைத்தார்.சரியான ஒரு காலப்பிரமாணத்தில் இசைத்தது, மிகவும் ரசிக்கும்படியாக அமைந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக, மங்களம் இசைத்து இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை