அம்பத்துார்: அம்பத்துார் மண்டலத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியின்போது கண்டறிய முடியாத நிலைமையில் உள்ள, 68,000 பேரின் விபரங்களை, கட்சியினரிடம் கொடுத்து அதிகாரிகள் மறு ஆய்வு நடத்துகின்றனர். அம்பத்துார் மண்டலத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், மொத்தமாக 3.74 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில், கண்டறிய முடியாத நிலைமையில் 68,000 பேர் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பாக முகவர்கள் மூலம், மறு ஆய்வு நடத்த மண்டல அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதன்படி, வாக்காளர் பதிவு அலுவலர் பிரபாகரன் தலை மையில், தாசில்தார் விக்ரம் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில், இருப்பிட மாற்றம், இறப்பு போன்ற காரணங்களால், கண்டறிய முடியாத வகையில் உள்ள, 68,000 பேரின் விபரங்கள் அடங்கிய தொகுப்பை, தேர்தல் கமிஷனால் அங்கிகரிக்கப்பட்ட, 12 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளிடம் கொடுத்தனர். அந்தந்த கட்சியைச் சேர்ந்த பாகமுகவர்கள், நேரில் சென்று மறு ஆய்வு நடத்தும் போது, விடுபட்டவர்கள் இணைய வாய்ப்பிருப்பதாகவும், அதன்வாயிலாக தகுதியுள்ள ஒரு வாக்காளரும் விடுபட முடியாது எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.