ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், 21வது வார்டில், ஜெனரல் கரியப்பா நகர் உள்ளது. இங்குள்ள நான்காவது குறுக்கு தெருவில் உள்ள மயானம் அருகே, ஆவடி மாநகராட்சி சார்பில், குப்பையை உரமாக மாற்றும் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மயானம் அருகே உள்ள இடத்தை அளந்து, சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உரக்கிடங்கு அமைத்தால், சுகாதார சீர்கேடால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், உரக்கிடங்கு அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே, 2011ல், இங்கு குப்பை கிடங்கு அமைக்க முயன்ற போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை கொண்டு வர அதிகாரிகள் முயல்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஏற்கனவே, சாலை, குடிநீர், கால்வாய் என, எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்படுகிறோம். அதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இங்கு உரக்கிடங்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அந்த இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம். திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்றனர்.