பெரவள்ளூர் காவல் நிலைய கட்டுமான திட்டம் மதிப்பீடு; அரசு சொன்னது ரூ.5 கோடி; டெண்டர் கொடுத்தது ரூ.15 கோடி
சென்னை, :பெரவள்ளூர் காவல் நிலையம், 5 கோடி ரூபாயில் கட்டப்படும் என அரசு அறிவித்த நிலையில், எட்டே மாதங்களில் அதன் மதிப்பு மும்மடங்காக உயர்த்தப்பட்டு, தற்போது 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் அடுத்த பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு, புது கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பெரவள்ளூர் காவல் நிலைய புது கட்டடம், 5 கோடி ரூபாயில் கட்டப்படும் என, கடந்தாண்டு டிச., 17ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், பெரவள்ளூர் காவல் நிலையம் கட்டுமான பணிக்கு, 15 கோடி ரூபாய் என்ற மதிப்பீட்டில் சில மாதங்கள் முன் சி.எம்.டி.ஏ., டெண்டர் கோரியது. முதல்வர், 5 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கு, 15 கோடி ரூபாயில் டெண்டர் வெளியிட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதல்வர் அறிவித்தபடி, 5 கோடி ரூபாயில் தான் பெரவள்ளூர் காவல் நிலையம் கட்டுவதற்கான திட்டத்தில் நடவடிக்கைகளை துவக்கினோம். இதில், புதிய காவல் நிலைய கட்டடத்துக்கான வடிவமைப்பை உருவாக்க தனியார் கட்டடகலை வல்லுநரை நியமித்தோம். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இத்திட்டத்தின் மதிப்பீடு, சி.எம்.டி.ஏ., நிர்வாக முடிவின்படி, 15 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்படி, அடித்தளத்துடன் நான்கு தளங்கள் கொண்டதாக, 2,955 சதுர அடி பரப்பளவில் இந்த காவல் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டரில் மூன்று நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், ஈரோடைச் சேர்ந்த 'ஸ்ரீநிதி இன்பிரா' நிறுவனம், 13.91 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்தது. அந்நிறுவனத்துடன் பேச்சு நடத்தியதில், 13.53 கோடி ரூபாயில் காவல் நிலைய பணிகளை மேற்கொள்ள உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததாரரிடம் காவல் நிலைய கட்டுமான பணிகளை ஒப்படைக்க, சமீபத்தில் நடந்த சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். புதிய காவல் நிலையம் கட்ட, 5 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட திட்டம், எட்டே மாதங்களில் 15 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.