மடிப்பாக்கம், மடிப்பாக்கம், கைவேலி சந்திப்பில், நேற்று காலை 6:30 மணியளவில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு 'சுசூகி ஷிப்ட்' கார்கள் அவ்விடத்தை வேகமாக கடந்து சென்றன.சந்தேகம் அடைந்த போலீசார், துரத்தி சென்று இரண்டு கார்களையும் மடக்கிப் பிடித்தனர். காரில் சோதனை செய்ததில், 303 கிலோ கஞ்சா சிக்கியது. இதன் மதிப்பு 1.50 கோடி ரூபாய்.விசாரணையில், விஜயநல்லுாரைச் சேர்ந்த ரஞ்சன் கிஷோர்குமார், 30, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த அசோக், 29, கிழக்கு தாம்பரம், இரும்புலியூரைச் சேர்ந்த உதயகுமார், 23, என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரிக்கின்றனர்.இது குறித்து, மவுன்ட் துணைக் கமிஷனர் சுதாகர் கூறியதாவது:மடிப்பாக்கம் காவல் எல்லைக்குள் கைதான மூவரிடம் இருந்தும், 303 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கிஷோர்குமார், அசோக், உதயகுமார் ஆகிய மூவர் மீதும், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.இதில் கிஷோர்குமார், மடிப்பாக்கம் தி.மு.க., வட்ட செயலர் செல்வம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர். கஞ்சா எங்கிருந்து கடத்தி வந்தனர்; யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.