வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எப்ப போனாலும் ஓசி.பிரியாணியும், மாமூலும் குடுத்துடறாங்க. அவிங்க வியாபாரமும் சூப்பரா போகுது.
அண்ணா நகரில், 100க்கும் மேற்பட்ட கடைகள், சட்டவிரோதமாக 24 மணிநேரமும் இயங்குகின்றன. இதை தடுக்க வேண்டிய போலீஸ், மாநகராட்சியே கைகட்டி வேடிக்கை பார்ப்பது, பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.'துாங்கா நகரம்' எனும் சிறப்பை பெற்ற மதுரை மாநகரையே மிஞ்சும் அளவிற்கு, தற்போது சென்னை மாநகரம் மாறி வருகிறது.குறிப்பாக, உணவு பிரியர்களின் சொர்க்கமாக மாறிவரும் அண்ணா நகரில், விதிமீறி 24 மணிநேரமும் உணவகங்கள் இயங்கி வருகின்றன.அந்தவகையில் திருமங்கலம் அருகில், அண்ணாநகர் 2வது அவென்யூவில், 'கோரா புட் ஸ்ட்ரீட்' என்ற ஒரே கூரையின் கீழ், 50க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன. இங்கு பீட்சா, பிர்ரியா டகோஸ், நுாடுல்ஸ், மோமோஸ் மற்றும் டீ முதல் இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் ப்ரை, ஐஸ்கிரீம் வரை, பாரம்பரிய தென்னிந்திய உணவுகள் மற்றும் வெளிநாட்டு புகழ்பெற்ற எல்லா உணவுகளும் கிடைக்கின்றன.அண்ணா நகரில் இப்பகுதியில் மட்டுமின்றி, அங்குள்ள 2வது அவென்யூ, 3வது அவென்யூ, ஐந்தாவது பிரதான சாலை, சாந்தி காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார சாலையோரங்களில், இரவு உணவகங்கள் விதிமீறி செயல்படுகின்றன. இந்த உணவகங்கள் 24 மணிநேரமும் இயங்க, யார் அனுமதி அளித்தது என தெரியவில்லை. இதுகுறித்து அண்ணா நகர், திருமங்கலம் என, இரு எல்லை போலீசார், அண்ணா நகர் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட யாரிடம் கேட்டாலும், மாறி மாறி கைகாட்டுகின்றனர். இதுபோன்று 24 மணிநேரமும் இயங்கும் உணவகங்களால், இரவு நேரம் மட்டுமின்றி, காலை முதல் மாலை வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:சென்னையில் மற்ற இடங்களை விட, அண்ணா நகரில் வணிக ரீதியான கடைகளும், உணவகங்களும் அதிகம். இதை கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி மற்றும் போலீசார், கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். கடையில் ஏற்படும் விதிமீறல் பிரச்னைகளுக்கு உடந்தையாக தான் செயல்படுகின்றனர். இந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ்கள், பாதுகாப்பான மற்றும் துாய்மையான உணவு வழங்க வேண்டும் என்பதற்கு தானே தவிர, கடையை 24 மணி நேரமும் நடத்துவதற்காக அல்ல. இதுபோல், சட்ட விரோதமாக செயல்படும் கடைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுத்து முறைப்படுத்த வேண்டும். சமீபத்தில் இங்குள்ள ஒரு ரோஸ் மில்க் கடையில், காலாவதியான பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதேபோல், பல கடைகளிலும் பிரச்னை இருக்கலாம்.இந்த கடைகள் தொடர்பாக, மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் விவாதிக்கும் போது, அப்படியே அடக்கி விடுகின்றனர். இப்பகுதியில் இயங்கும் கடைகளை குறித்து, போலீஸ் நுண்ணறிவு மற்றும் உளவுத்துறை போலீசார் பல முறை எச்சரித்தும், அலட்சியமாகவே உள்ளனர். தமிழக அரசு இதை கண்காணித்து, சட்டவிரோதமாக இரவு நேரம் மற்றும் 24 மணி நேரமும் இயங்கும் கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை கடைகளை நடத்த அரசு அனுமதித்தால், மக்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு முறைப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். -நமது நிருபர்-
எப்ப போனாலும் ஓசி.பிரியாணியும், மாமூலும் குடுத்துடறாங்க. அவிங்க வியாபாரமும் சூப்பரா போகுது.