| ADDED : டிச 30, 2025 04:58 AM
சென்னை: நடைபாதை கடைகளை அகற்றாவிட்டால், ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்துவோம் என, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை அறிவித்துள்ளது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அருண்குமார் மற்றும் நிர்வாகிகள், ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி துணை கமிஷனர் சிவ.கிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று மனு அளித்தனர். பின், பேரவை தலைவர் அருண்குமார் அளித்த பேட்டி: கொரோனா பாதிப்புக்குப்பின், நடைபாதை கடைகள் அதிகரித்துள்ளன. சிறிய வியாபாரிகள் சாலையோரம் அமர்ந்து பொருள்கள் விற்ற நிலை மாறி, தற்போது சாலையோரம் பெரிய அளவில் பொருள்களைக் குவித்து, மொத்த வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிறிய பூக்கடைகளை தவிர நடைபாதைக் கடைகளை அகற்றக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால், வாடகை செலுத்தியும், அரசுக்கு மின் கட்டணம், வரி எல்லாம் முறையாக செலுத்தி கடை நடத்தும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதற்கிடையே, சாலையோர வியாபாரிகளை அங்கீகரிப்பது போல்,அவர்களுக்கான வாடகை கட்டண நிர்ணயத்தை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி உள்ளனர். இந்த செயல் வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும். முறைப்படி அனுமதி பெற்று கடை நடத்துவோர் நலன் கருதி, நடைபாதையில் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் சாலையோரக் கடைகளை அகற்றாவிட்டால், ரிப்பன் மாளிகை முன் கடை அமைக்கும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.