சென்னை,தமிழகத்தில், 18ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர், அகத்தியர், திருமங்கையாழ்வார், வள்ளுவர், முத்துலுக்க புலவர் உள்ளிட்ட புலவர்களைப் பற்றி, 'புலவர் புராணம்' என்ற தலைப்பில், ஓலைச்சுவடிகளில் எழுதினார்.சுவடிகளில் இருந்த அதற்கு, பேராசிரியர் சு.வேங்கடராமன் உரை எழுத, 'தாமரை பிரதர்ஸ்' மீடியா நிறுவனம், சமீபத்தில் நுாலாக வெளியிட்டது.இந்நிலையில், சென்னை, மயிலாப்பூர் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில், 'மதுரத்வனி' அமைப்பு நடத்தும் மார்கழி இசைவிழாவில், 'புலவர் புராணம்' நுாலின் அறிமுகமும், அதில் இடம்பெற்ற புலவர்களின் பாடல்களை இசையுடன் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.இதில், தருமையாதீனத்தின் புலவர் மதுசூதனன் கலைச்செல்வன், தண்டபாணி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும், நுாலில் உள்ள புலவர்களின் வரலாறுகளையும் விளக்கினார். தொடர்ந்து, புலவர் புராணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை, இசைக் கலைஞர் ஸ்ரீவத்சன் பாடி, விளக்கினார். இதை, இசை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர்.புலவர் புராணம் நுால் பெற 75500 09565 எண்ணை அழைக்கலாம்.