பிராட்வே: பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் உள்ளிட்ட, 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலை 40 அடி அகலமுடையது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையில், 20 அடிக்கு பழம், பூ, உள்ளிட்ட சிறு கடைகள் ஆக்கிரமித்திருந்தன. இதனால், சாலை மேலும் குறுகி, நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது. மக்கள் நலனை கருத்தில் வைத்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று 200க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன், 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை 'பாப் காட், பொக்லைன்' உள்ளிட்ட இயந்திரங்களால் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள், பூக்கடை போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். 'இப்பகுதியில் மீண்டும் கடைகள் வைக்கக்கூடாது; பூங்கா நகர், டி.என்.பி.எஸ்.சி. சாலையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஒப்புக்கொள்ளாத ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை மறித்ததும், கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரித்ததும் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.