| ADDED : பிப் 12, 2024 02:23 AM
மாடம்பாக்கம்:தாம்பரம் மாநகராட்சி, நுாத்தஞ்சேரி குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்படுகிறது.அதிலிருந்து ஸ்ரீராம் நகர், ஆதித்யா நகர், சபாபதி நகர், திருவள்ளுவர் தெரு, மாணிக்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.அந்த தொட்டி கட்டி, 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், பழுதடைந்து உடையும் நிலைக்கு மாறியது. இதனால், அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்புவது நிறுத்தப்பட்டு, அருகே 57 லட்சம் ரூபாய் செலவில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய புதிய தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி மந்தமாக நடந்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். உடையும் நிலையில் உள்ள பழைய தொட்டியால் விபரீதம் ஏற்படும் முன், அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.