வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தில் பல நாட்களுக்கு முன்,'மில்லிங்' செய்தும், புதிய சாலை அமைக்காமல் இருப்பதால், தினமும் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், சறுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் அமைக்க, பழைய சாலையில்,'மில்லிங்' எனப்படும் சாலையை சுரண்டுவது கட்டாயமாக்கப்பட்டது.இதனால், புதிய சாலைகள் அமைக்க, முதலில் அந்த சாலைகள் சுரண்டப்படுகின்றன. அதன் பின், சுரண்டப்பட்ட சாலையில் உடனே புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால், சில இடங்களில் சாலைகள் சுரண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், புதிய சாலைகள் அமைக்கப்படாமல் இருப்பது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் சென்னை, பாடி மேம்பாலத்தில் புதிய சாலை அமைக்க, பல நாட்களுக்கு முன், சாலை சுரண்டப்பட்டது.ஆனால், இதுவரை புதிய சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், சறுக்கி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.இதுகுறித்து, பாடி மேம்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:பாடி மேம்பாலத்தில் வில்லிவாக்கம், திருமங்கலம், கொரட்டூர், பாடி உள்ளிட்ட வழியாகச் செல்லும் பெரிய மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இங்கு, வில்லிவாக்கம் வழியாகச் செல்லும் இரு பாதையிலும் சில நாட்களுக்கு முன், சாலை சுரண்டப்பட்டது. இந்த கழிவுகளை உடனே அகற்றாமல், மேம்பாலத்தில் ஓரமாக குவித்து வைத்துள்ளனர்.அத்துடன், இதுவரை புதிதாக சாலையும் அமைக்காததால், ஜல்லி கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி விழுகின்றனர். தினமும், நுாற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.