சென்னை, மெட்ரோ ரயில் பணியால் கடுமையாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, அரசிடம் 100 கோடி ரூபாய் கேட்க, நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்துள்ளது.சென்னையில் அண்ணா சாலை, ஜி.என்.டி., சாலை, ஜி.எஸ்.டி., சாலை, நுாறடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தரமணி இணைப்பு சாலை உள்ளிட்ட 250 கி.மீ., சாலைகள், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக பராமரிக்கப்படுகின்றன.இவற்றில், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் சாலையிலும், பூமிக்கடியிலும் நடைபெற்று வருகின்றன.இதற்காக சம்பந்தப்பட்ட சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலைகளை முறையாக பராமரிக்காமல், மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.'மிக்ஜாம்' புயல் காரணமாக, பல சாலைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக மாறியுள்ளன.இந்த சாலைகள் குறித்து, நெடுஞ்சாலைத் துறையின் மொபைல்போன் செயலிக்கும், அதிக அளவில் புகார்கள் வருகின்றன. இதனால், சாலைகளை சீரமைக்கும்படி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர், பலமுறை மெட்ரோ ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.ஆனால், சாலை பராமரிப்பிற்குத் தேவையான நிதி இல்லை எனக்கூறி, மெட்ரோ ரயில் நிர்வாகம் தட்டிக் கழித்து வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்குவதால், சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு, நெடுஞ்சாலைத் துறை தள்ளப்பட்டு உள்ளது.இதற்காக, 100 கோடி ரூபாயை வழங்கும்படி, அரசிடம் கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.