வடக்கு கடற்கரை: நவ. 18-: சென்னை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடி கும்பல் மோதிக்கொண்டதால், பாரிமுனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடிகள் கத்திகளுடன் விரட்டிச்சென்றதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தண்டையார்பேட்டை, கைலாச தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், 31. அவரது கூட்டாளிகள் யுவராஜ், 26, லோகேஷ், 30, விழுப்புரத்தை சேர்ந்த கார்த்திக், 28, பிரபாகரன், 31, வெங்கட், 29, ஆறு பேரும், 2017ல் ஜீவா என்பவரை கொலை செய்தனர். இவ்வழக்கு சம்பந்தமான விசாரணைக்காக, பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நேற்று ஆஜராகினர். அப்போது, கொலை செய்யப்பட்ட ஜீவாவின் கூட்டாளிகளான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ், 21, தீனா, 24, ஜான்சன், சாந்தகுமார், யுவராஜ், ரோலக்ஸ் பாய் ஆகியோர் நீதிமன்றம் அருகே காத்திருந்தனர். விசாரணை முடிந்து, மதியம் 1:00 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து யுவராஜ், லட்சுமணன் உள்ளிட்ட ஆறு பேரும் வெளியே வந்தனர். அவர்களை சுற்றி வளைத்த ஆகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டினர். பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த நிலையில், உயிர் பயத்தில் ஆறு பேரும் தப்பி ஓடினர். ராஜாஜி சாலை சிக்னல் அருகே, இரு தரப்பினரும் அடிதடியில் இறங்கினர். கத்தியால், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில், யுவராஜ், லட்சுமணன், தீனா ஆகியோரின் உள்ளங்கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதை பார்த்து, பொதுமக்கள் பீதியில் அலறியடித்து ஓடினர். வடக்கு கடற்கரை போலீசார் வருவதை பார்த்து, இரு தரப்பினரும் தப்பி ஓடினர். விரட்டிச் சென்ற போலீசார், ஆகாஷை மட்டும் பிடித்தனர். ஜான்சன், சாந்தகுமார் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். காயமடைந்த மூவரையும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். பட்டப்பகலில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, நீதிமன்றம் அருகே கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரவுடிகள் தாக்கிக்கொண்டது, தலைநகரின் பாதுகாப்பின்மையை காட்டியுள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மற்றொரு சம்பவம் சென்ட்ரல், பல்லவன் சாலை எஸ்.எம்., நகரில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், மோதலில் ஈடுபட முயன்ற ராஜ்கமல், 27, சுள்ளான், 20, ஆகிய இருவரையும், திருவல்லிக்கேணி போலீசார் பிடித்தனர். விசாரணையில், வடபழனியைச் சேர்ந்த மணி, 35, அருண்குமார், 18, உள்ளிட்டோரை தாக்க முயன்றது தெரியவந்தது. இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இரு கத்திகள், இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சிலரை தேடி வருகின்றனர். மோதலுக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது: எஸ்.எம்.நகருக்கு வந்த மணியிடம், ராஜ்கமல், தன் நண்பர்களுடன் சேர்ந்து தகராறு செய்தார். மணியை சாலையில் முட்டியிட வைத்ததுடன், கத்தியால் அவரது இடது கைது மற்றும் முதுகை கீறிவிட்டு விடுவித்தனர். இதையடுத்து மணி, தன் நண்பர் களுடன் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், ராஜ்கமல் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, இரு தரப்பினரும் தாக்கிக்கொள்ள முயன்றபோது சிக்கினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.