பெரும்பாக்கம்: பெரும்பாக்கத்தில், மாற்றுத்திறனாளி மருத்துவ சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த, 82,174 ரூபாய், வங்கிக் கணக்கில் இருந்து திடீரென மாயமாகி விட்டதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தனியே வசிப்பவர் சம்சஸ்குதா; மாற்றுத்திறனாளி. இவர், அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'வெரிகோஸ் வெயின்' நோய் பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை முழுமையாக சரிசெய்ய, 1.50 லட்சம் செலவாகும் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தன் இரண்டு ஆண்டுகால சம்பளத் தொகை, 1.50 லட்சம் ரூபாயை, தன் வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில், க டந்த நவ., 25ம் தேதி காலை 10:26 மணிக்கு, அவரது வங்கி கணக்கில் இருந்து, 81,000 ரூபாய் எடுக்கப்பட்டதாகவும், அதை தொடர்ந்து, 10:57 மணிக்கு, மீண்டும் 174 ரூபாய் எடுக்கப்பட்டதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த சம்சஸ்குதா, பெரும்பாக்கம் காவல் நிலையத்திலும், மாத்துார் இந்தியன் வங்கி கிளையிலும், பணம் திருடு போனது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கிற்கு, யு.பி.ஐ., மூலம் பணம் சென்றது தெரிய வந்துள்ளது. அந்த வங்கி கணக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.