திருநின்றவூர்,ஆவடி அடுத்த திருநின்றவூர் வச்சலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ், 58; சுங்கத்துறையில் ஓட்டுனராக பணியாற்றினார்இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, உறவினர் ஷீலா, 57, என்பவருடன் வாழ்ந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, வாயில் ரத்தக் காயங்களுடன், வீட்டில் ராஜ் இறந்து கிடந்தார். தகவலறிந்த திருநின்றவூர் போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் திருநின்றவூர், ராமதாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கொத்தனாரான, ஷீலாவின் மருமகன் சேகர், 50, நேற்று காலை திருநின்றவூர் போலீசில் சரணடைந்தார்.விசாரணையில், நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்திற்கு துணி எடுக்க, ஷீலா சென்னை சென்றுள்ளார்சேகர் அவரை தேடி, மதுபோதையில் வீட்டிற்குச் சென்றபோது, ஏற்கனவே மது போதையில் வீட்டில் இருந்த ராஜுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகி உள்ளது. அப்போது சேகர் தாக்கியதில், ரத்தக் காயங்களுடன் ராஜ் மயங்கியுள்ளார். இதையடுத்து சேகர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இந்நிலையில், ராஜ் இறந்ததை அறிந்த சேகர், நேற்று தானாக வந்து போலீசில் சரணடைந்தது, விசாரணையில் தெரிந்தது.சேகரை கைது செய்த திருநின்றவூர் போலீசார், அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.