உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி சிறுவர் பூங்காவில் கடல் ஆமை பாதுகாப்பு மையம்

கிண்டி சிறுவர் பூங்காவில் கடல் ஆமை பாதுகாப்பு மையம்

சென்னை, காயமடைந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் வகையில், 14.50 கோடி ரூபாயில், கிண்டி சிறுவர் பூங்காவில், கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.சென்னையில், எண்ணுார் முதல் கோவளம் வரை, கடற்கரையில் படகு, கப்பல், வலைகளில் சிக்கி காயமடைந்தும், இறந்தும் ஆமைகள் கரை ஒதுங்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.தன்னார்வ அமைப்புகள் உதவியுடன், காயமடைந்த ஆமைகளுக்கு சிகிச்சை அளிப்பதும், இறந்த ஆமைகளை கடற்கரையில் புதைக்கும் பணியையும், வனத்துறை செய்து வருகிறது. ஆனால், கடல் ஆமை பாதுகாப்புக்கென எந்த கட்டமைப்பும் இல்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு, கடல் ஆமைகளை பாதுகாக்க திட்டம் வகுக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கிண்டி சிறுவர் பூங்காவில், 5,500 சதுர அடி பரப்பில், 'கடல் ஆமை பாதுகாப்பு மையம்' அமைக்கப்பட உள்ளது.இதற்காக, 14.50 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. துறைரீதியான அனுமதிக்காக, கோப்புகள் தயாராகி வருகின்றன. விரையில், இம்மையம் கட்டும் பணி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கடற்கரையில் காயத்துடன் ஒதுங்கும் ஆமைகளுக்கு, இங்கு சிகிச்சை அளித்து, குணமடைந்த பின் மீண்டும் அவை கடலில் விடப்படும். பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மாணவ - மாணவியரின் கல்விக்கு உதவும் வகையிலும், கடலில் வாழ்வது போல் கட்டமைப்பு ஏற்படுத்தி ஆமைகள் காட்சிப்படுத்தப்படும்.ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவியாக இருக்கும். இதன் வாயிலாக, கடல் ஆமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதுடன், அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களில் இருந்து ஆமைகள் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி