செம்பியம், செம்பியம் காவல் நிலைய குற்றப்பிரிவு, தலைமை காவலர் செந்தில்குமார், 48. இவர், 2020 மே 22ம் தேதி, குமரன் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பணியில் இருந்தார்.மேற்குறிப்பிட்ட நாள் முதல் 24ம் தேதி காலை வரை என அடுத்த சில நாட்கள், முன்னறிவிப்போ, விடுப்போ இன்றி தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருந்தார்.அதே ஆண்டு, ஜூன் மாதம் 'கொரோனா' கட்டுப்பாட்டு பகுதியான, மேற்கு மாம்பலம், அண்ணாமலை நகரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணின், பெயர், மொபைல்போன் எண், முகவரியை கட்டாயமாக பெற்று, இரவில் அவர் வீட்டிற்கு சென்று, அவரது கையை பிடித்து இழுத்து அத்துமீறியிருக்கிறார்.மேலும், அவருக்காக ஒதுக்கப்பட்ட சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பில் மனைவியுடன் வசிக்காமல், மேற்கு சைதாப்பேட்டையில், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.மேலும், அங்கு வசித்த மற்றொரு பெண்ணிடமும் 'முறைகேடாக' நடந்துள்ளார். மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விசாரித்தார். இதில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானது. இதையடுத்து, செந்தில் குமாரை பணி நீக்கம் செய்யும் உத்தரவு, புளியந்தோப்பு துணை கமிஷனர் வாயிலாக வழங்கப்பட்டது.