உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மனதை நிதானப்படுத்திய ஸ்ரீவித்யா, சுதா

 மனதை நிதானப்படுத்திய ஸ்ரீவித்யா, சுதா

ப க்தி, மகிழ்ச்சியை குறிப்பது மார்கழி மாதத்தின் விசேஷம். அதற்கேற்ற வகையில் தன் கச்சேரியை, ஆழ்வார்பேட்டை எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் நிகழ்த்தினர், அய்யர் சகோதரிகளான ஸ்ரீவித்யா - சுதா. துவக்கத்தில், 'நம்மிடா தயாயுன்சி' என்ற வர்ணம். ரட்சிக்கவும், மகிழ்விக்கவும் வைக்கும் ராகமான ஜனரஞ்சனியில் பாடி அசத்தினர். அவர்களது குருவான கொல்கட்டா கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆதி தாளத்தில் இயற்றிய இந்த கிருதியில், தங்கள் குரல் வித்தையை கேட்கவைத்தனர். அடுத்ததாக, மனதிற்கு பக்தியை நல்கும் சாரங்கா ராகம், தேசாதி தாளத்தில் 'கன நாதனே' கிருதியை பாடினர். பல பக்தி பாடல்களில் இடம்பெற்றுள்ள இது, வேதங்கள் போற்றும் விநாயகரின் பெருமையை அனைவருக்கும் தெரியப்படுத்தினர். இந்த இடத்தில் திவ்யா ரமேஷ் தம்புரா இசைக்க, ராக ஆலாபனையை சுதா துவங்க, சிட்டை ஸ்வரங்கள் மற்றும் பல்லவி வரிகளுக்கு கற்பனை ஸ்வரம் சேர்க்கப்பட்டவிதம் ரம்மியமாக இருந்தது. பின், பாபநாசம் சிவனால் மிஸ்ரசாபு தாளத்தில் இயற்றிய 'சரணம் அய்யப்பா' கிருதியை ராக ஆலாபனையோடு துவங்கினர். வயலின் கலைஞர்களாக இசை பயணத்தை துவங்கிய அய்யர் சகோதரிகள், கச்சேரியில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கைலாசபதியின் வயலினுக்கு வழிவிட்டனர். அவரும் நல்வாய்ப்பாக இதை பயன்படுத்தி கோலோச்சினார். மிஸ்ரசாபு தாளத்தில் அமைந்த இக்கிருதிக்கு, கற்பனை ஸ்வரங்கள் மற்றும் ஸ்வர கோர்வைகளால், பூரிக்க வைத்தனர். முக்கிய உருப்படியாக, சோகமுமின்றி, சந்தோசமும் இன்றி மனதை நிதானப்படுத்தும் வகையில், கமகப்ரியா ராகத்தில், வீணையில் 10 வித கமகம் உருவாக்கிய, மதுரை மீனாட்சி அம்மனை போற்றிய, 'மீனாட்சி மேமுதம் தேஹி' என்ற முத்துசுவாமி தீட்சிதரின் கிருதியை தேர்வு செய்திருந்தனர். ராக ஆலாபனை பாட ஆரம்பித்த ஸ்ரீவித்யாவின் ஸ்வர ப்ரயோகங்கள், சபையில் இருந்தோரை திளைக்க செய்தன. இறுதியாக, 'உழவர்' பாபுவின் தனி ஆவர்த்தனம் மிருதங்கத்தில் துவங்கியது. உற்சாகத்தை வழங்கும் ரவிசந்திரிகா ராகத்தில், 'மாகேௗரா வீச்சாரமு' என்ற தியாகராஜரின் கிருதியை அரங்கேற்றி, சபையை நிறைவு செய்தனர். -ரா.பிரியங்கா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை