செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, ஓ.எம்.ஆரில் இருந்து மகா நகர், ஜெவகர் நகர், எழில்முக நகர் நோக்கி செல்லும் சாலை, 3 கி.மீ., நீளம், 40 அடி அகலம் உடையது. ஆனால், 20 அடி சாலையாக உள்ளது.இதை, 40 அடி அகலமாக மாற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. முதற்கட்டமாக, மகா நகர் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.இதற்காக, சாலையோரம் பள்ளம் நிரப்ப பயன்படுத்தப்படும் ஜல்லிக்கற்கள் கொட்டி சமன்படுத்த வேண்டும். அதன்பின், தார் கலவை கொட்டி விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆனால், குளத்தில் இருந்து களிமண் அள்ளி, சாலை விரிவாக்கப் பகுதியில் கொட்டி சமன்படுத்தப்பட்டது. இதனால், பணி முடிந்த பின், கனரக வாகனங்கள் செல்லும் போது, சாலை உள்வாங்கி சேதமடையும் நிலை ஏற்படும் என, நம் நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து மண்டல அதிகாரிகள், சாலை போடும் பணியை நிறுத்தினர். களிமண்ணை அகற்றி, வேறு மண் கொட்டி சாலையை விரிவாக்கம் செய்ய, ஒப்பந்த நிறுவனத்திடம் அதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும், களிமண் பயன்படுத்திய காரணம் குறித்து, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது.