திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டலம், நான்காவது வார்டு, இரண்டு, மூன்று பகுதி சபை கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.இதில், மாநகராட்சி உதவி பொறியாளர் அன்னலட்சுமி, மலேரியா துறை அலுவலர் மணிமாறன், குடிநீர் மற்றும் வடிகால் துறை அதிகாரி மதன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், எர்ணாவூர் - பஜனை கோவில் தெரு, மேட்டுத் தெரு, வள்ளுவர் நகர், மாகாளியம்மன் கோவில் தெரு, எர்ணீஸ்வரர் நகர் மக்கள் பங்கேற்று, தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர்.அப்போது, ஆல் இந்தியா ரேடியோ நகர் சுடுகாடு, சுனாமி குடியிருப்பு ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு, மூன்று ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டியுள்ளது.இதனால், பாதாசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தடுப்பூசி போடப் போகும் கர்ப்பிணியர், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இறுதி ஊர்வலங்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் உள்ளது. எனவே, ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும். மாகாளியம்மன் கோவில் தெருவில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் பணியமர்த்தப்பட வேண்டும். அவசிய மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். திருவீதியம்மன் நகரில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டடம் திறக்கப்பட்டது. ஆனால், செயல்பாட்டிற்கு வரவில்லை.இதனால், செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.