'சிக்கல்' சிவராமனுக்கு, விக்னேஷ், சுரேஷ் என, இரண்டு மகன்கள். அதில், இளைய மகன் சுரேஷுக்கு, வரன் தேடி வருகின்றனர். மூத்த மகன் விக்னேஷின் மனைவி நந்தினியின் தங்கைக்கும் வரன் தேடும் படலம் நடக்கிறது. அதேபோல், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்படும் 'சென்சிடிவ்' செல்லப்பா, தன் மகனுக்கு வரன் தேடுகிறார். சாய் சங்கரா மேட்ரிமோனியலில், வரன்களை சேர்த்து வைப்பவர் சீனு. அவரது முயற்சியில், செல்லப்பா மகனுக்கும், நந்தினியின் தங்கைக்கும் வரன் பேசி, கைகூடும் நிலையில் உள்ளது. 'சென்சிடிவ்' செல்லப்பா குடும்பத்தைப் பற்றி அறிய, அவரது நண்பரிடம் விசாரிக்கிறார் சிக்கல் சிவராமன். இந்த தகவல் செல்லப்பாவுக்கு தெரியவர, கோபத்தில், தன் குடும்பத்தைப் பற்றி சந்தேகிக்கும் சம்பந்தம் வேண்டாம் என்கிறார். இந்நிலையில் சுரேஷுக்கும், லலிதா என்பவரின் மகளுக்கும் மணம் முடிக்க, நிச்சயம் செய்ய முடிவாகிறது. இதையறிந்த லலிதாவின் தம்பி செல்லப்பா, அந்த சம்பந்தத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார். இரண்டு திருமணங்களும் தடைபட்டதற்கு, மாமனார்தான் காரணம் என, மருமகள் நந்தினிக்கும், மாமனார் சிக்கல் சிவராமனும் வாக்குவாதம் ஏற்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, தன்னால் ஏற்பட்ட சிக்கல்களை கலைந்து, நின்று போன திருமணங்களை நடத்தி காட்டுவேன் என, சபதம் செய்து, சிக்கல் சிவராமன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதேபோல், திருமணங்களை நடத்தி காட்டுகிறார். இதற்காக அவர் நிகழ்த்தி காட்டிய திட்டம் சுவாரசியமானது. இறுதியில், 'வீட்டில் ஏற்படும் குடும்ப பிரச்னைகளுக்கு, பெரியோர்களாலும் தீர்வு காண முடியும்' எனக்கூறி, நிறைவு செய்கிறார், இந்நாடகத்தின் கதாநாயகன் சிக்கல் சிவராமன். நாடகத்தின் துவக்கத்திலேயே, சிக்கல் சிவராமன் குடும்பத்தினர், சமூக வலைதளங்களில் நேரம் செலவழிப்பது, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது போன்ற தற்கால நடைமுறை விஷயங்களை குறித்து நகைச்சுவையாக காட்சிப்படுத்தி, இன்றைய தலைமுறையினரின் அவலத்தை நையாண்டி செய்திருந்தார். மார்கழி உத்சவத்தையொட்டி, எஸ்.எல்.நாணு எழுதி இயக்கிய, 'சிக்கல் சிவராமன்' நாடகம், சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், நேற்று முன்தினம் நடந்தது. 'சிக்கல்' சிவராமனாக நடித்த 'காத்தாடி' ராமமூர்த்தி, தன் நடிப்பு மற்றும் நகைச்சுவை உணர்வால், ரசிகர்களிடம் கைதட்டல்களை அள்ளினார். அவருடன் நடித்த சக கலைஞர்களும், நாடகத்திற்கு உறுதுணையாக இருந்தனர். - நமது நிருபர் -