சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் வாகன புறப்பாடு விமர்சையாக நடந்தது.வைகாசி விசாகமான, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின், யாகசாலை பூஜைகள் துவங்கி மகா பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.நிகழ்வு துவங்கும்போது, வடபழநி பகுதியில் மட்டும் மழை பெய்தது. திடீர் மழையால், பக்தர்கள் உற்சாகத்தில் நனைந்து, 'அரோகரா...' என, விண்ணதிர கோஷம் எழுப்பினர்.பின், சீர்வரிசை தட்டு வைத்து, யஜமான சங்கல்ப நிகழ்வு நடந்தது. இதில், திருக்கல்யாண கோவில் தக்கார் இல.ஆதிமூலம், துணைக்கமிஷனர் ஹரிஹரன் ஆகியோருக்கு சங்கல்பம் செய்யப்பட்டது.அடுத்ததாக, கலச பூஜை நடத்தப்பட்டு சுவாமிக்கு பூணுால் மாற்றி, காப்பு கட்டும் வைபவம் நடந்தது. யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக, மாலை மாற்றுதல், பாலும் பழமும் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின், திருமாங்கல்ய பூஜை நடந்தது.இதைத்தொடர்ந்து திருமாங்கல்ய தாரணம், பொரியிடுதல் நிகழ்வு தீபாராதனை நடந்தது.முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் முடிந்ததும், மொய் எழுதும் வைபவம் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவில் அன்னதானக் கூடத்தில், 750 பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் இரவு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.நேற்று இரவு மயில்வாகனத்தில் புறப்பாடு நடந்தது. பின், கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இன்று இரவு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.