| ADDED : ஜன 28, 2024 12:30 AM
சென்னை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் 164 பயணியருடன், சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.நேற்று அதிகாலை நடுவானில் பறந்தபோது, முகமது அசாருதீன், 25, என்ற பயணி, திடீரென மதுபோதையில், விமானத்திற்குள் ரகளையில் ஈடுபட்டார்.பணியில் இருந்த விமான பணிப்பெண்கள், முகமது அசாருதீனை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், முடியவில்லை. வாலிபரால் சக பயணியர் அச்சம் அடைந்தனர். உடனடியாக விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலை 2:30 மணிக்கு அந்த விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர், விமானத்துக்குள் போதையில் ரகளை செய்த முகமது அசாருதீனை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், துபாயில் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலையில் இருந்ததாகவும், தற்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.