| ADDED : பிப் 12, 2024 01:40 AM
சென்னை:தாம்பரம்-- - கோடம்பாக்கம் இடையே ரயில்வே தண்டவாளம் மற்றும் ரயில்வே கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட ரயில்கள், நேற்று காலை 10:30 முதல் மதியம் 3:30 மணி வரை ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்வதற்காக, தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு ஒரே நேரத்தில் அதிகளவில் ரயில் பயணியர் குவிந்ததால், தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும், பயணியரின் அதிகரிப்பால், பேருந்துகளின் உள்ளேயும் நெரிசல் ஏற்பட்டது. ரயில் சேவை ரத்து காரணமாக, கூடுதல் அரசு பேருந்து இயக்கப்பட்டது.இருந்த போதிலும், அதிகளவிலான பயணியர் குவிந்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அதேபோல், அண்ணா சாலை அருகே உள்ள தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு, குடும்பத்தினர் ஒரே நேரத்தில் வந்ததாலும், தங்க சாலையில் நடந்த பொது கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வந்ததாலும், அண்ணா சாலையில் பயங்கரமான வாகன நெரிசல் ஏற்பட்டது.