இருவேறு சாலை விபத்துகளில் முதியோர் இருவர் உயிரிழப்பு
அண்ணா நகர், :இருவேறு இடங்களில், சாலையை கடக்க முயன்ற இருவர், விபத்தில் பலியாகினர். அமைந்தகரையை சேர்ந்தவர் தேவேந்திரன், 91. இவர், நேற்று முன்தினம் காலை, அமைந்தகரை புல்லா அவென்யூவில், சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோ மோதி துாக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், திருமுல்லைவாயலை சேர்ந்த சின்னத்தாய், 76. இவர், கடந்த 4ம் தேதி, அண்ணா நகர் சித்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருமகனை பார்க்க வந்தார். அப்போது, என்.எஸ்.கே., நகர், 25வது தெரு முனையில் நின்று, அண்ணா நகர், மூன்றாவது அவென்யூ சாலையை கடக்க முயன்றார். அப்போது, அண்ணா நகர் மேம்பாலத்தில் இருந்து, டவுண்டானா நோக்கி சென்ற ஸ்கூட்டர் மோதி காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னத்தாய், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும், அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.