| ADDED : பிப் 13, 2024 12:18 AM
நெற்குன்றம்,தனியார் காலிமனையில் கொட்டப்படும் குப்பை, கட்டட கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலந்த மண்ணால், நெற்குன்றம் பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 148வது வார்டில், என்.டி., படேல் சாலை உள்ளது. இச்சாலையோரம், 1 ஏக்கர் பரப்பளவிற்கும் மேல் உள்ள காலிமனை உள்ளது. இந்த நிலம் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த நிலம் போதிய பராமரிப்பின்றி, சில பகுதிகளில் புதர் மண்டி உள்ளது. இந்த இடத்தை சிலர், குப்பை மற்றும் கழிவு மண் கொட்டும் குப்பைக் கிடங்காக மாற்றி உள்ளனர். தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பை, கட்டட கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலந்த மண் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. மேலும், லாரிகள் அடிக்கடி வருவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் துாசி படர்ந்து விடுகிறது.மேலும், பல மாதங்களாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள லாரி உள்ளிட்ட வாகனங்களும் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மறைவில், சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன.எனவே, இதை தடுக்க மாநகராட்சி, வருவாய் துறை மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.