மேலும் செய்திகள்
கல்லுாரியில் கால்பந்து போட்டிகள்
08-Feb-2025
சென்னை:சென்னை அண்ணா சாலையில், அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் எம்.எல்.ஏ., - எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணாசாலையில், 2018 ஏப்.,3ல் வி.சி., சார்பில், அக்கட்சியின் துணை பொது செயலர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் பேரணியாக சென்று, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை நீர்த்துப் போக செய்யும் வகையிலான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்; இந்த கோரிக்கைக்காக வட மாநிலங்களில் போராடியவர்கள் மீது காவல் துறை தாக்குதலில் இறந்தவர்களுக்கு தலா, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி, இந்த போராட்டம் நடந்தது.இது தொடர்பாக, எஸ்.எஸ்.பாலாஜி, செல்லத்துரை, செல்வம், அப்துல் ரகுமான், ஜெகன், வெங்கடேசன் ஆகியோர் மீது, அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், வன்முறையை துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதேபோல, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மீது கண்ணாடி பாட்டிலை வீசியதில், அவர் காயம் அடைந்ததாக, எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., உள்பட மூன்று பேர் மீது, மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.இந்த இரண்டு வழக்குகள், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்குகளில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது.இந்த வழக்குகள் நேற்று நீதிபதி ஜி.ஜெயவேல் முன், தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டன. நேற்று காலை 10:30 மணிக்கு, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். பகல் 12:00 மணிக்கு, வழக்கின் தீர்ப்பை நீதிபதி வாசித்தார்.அப்போது, 'எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஆறு பேர் மீதான குற்றச்சாட்டுகள், போலீசார் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை' எனக்கூறி, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினர்.
08-Feb-2025