உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கவர்னர் மாளிகை சாலையில் பேட்ச் ஒர்க் சொதப்பியதால் வாகனங்கள் தினம் திணறல்

கவர்னர் மாளிகை சாலையில் பேட்ச் ஒர்க் சொதப்பியதால் வாகனங்கள் தினம் திணறல்

சென்னை, கிண்டி கவர்னர் மாளிகை நுழைவுப் பகுதி சாலையில் மேற்கொண்ட ஒட்டுப்பணி சொதப்பியதால், வாகன ஓட்டிகள் தினமும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கிண்டி கவர்னர் மாளிகை, சர்தார் பட்டேல் சாலையில் உள்ளது. இது ஜி.எஸ்.டி., சாலை, அடையாறு, அண்ணா பல்கலை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கிறது. தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள், இந்த சாலையை பயன்படுத்துகின்றன. சில நாட்களுக்கு முன், இந்த சாலை சேதமடைந்தது. அதை மறைக்க, 'பேட்ச் ஒர்க்' எனும் ஒட்டுப்பணி செய்து தார் ஊற்றினர். தரமற்ற வகையில் இப்பணி மேற்கொண்டதால், சாலை மீண்டும் சேதமடைந்து குழிகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, கவர்னர் மாளிகையின் இரண்டாம் நுழைவுப் பகுதி வெளி சாலையில் ஏற்பட்ட குழிகளால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது: சர்தார் பட்டேல் சாலையில், மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், சாலையின் பல பகுதிகளில் பள்ளங்கள் மற்றும் குழிகள் உருவாகியுள்ளன. ஒட்டுப்பணி மேற்கொண்ட நிலையில், மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளன. தரமற்ற பணி மேற்கொண்டதாலே இவ்வாறு ஆகியுள்ளன. கவர்னர் மாளிகை உள்ள பகுதியிலேயே சாலை இந்தளவிற்கு மோசமாக இருக்கிறது என்றால், பிற பகுதிகளில் எப்படியிருக்கும் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. மாநகராட்சி அதிகாரிகள், சாலையை முறையாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை