சென்னை: யானை, புலி, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குளை தொட்டு பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில், மெய்நிகர் காட்சிக்கூடம், வண்டலுார் உயிரியல் பூங்காவில் அமைக்கப்பட உள்ளது. சென்னை வண்டலுாரில், 1,490 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, 172 வகையைச் சேர்ந்த, 2,300 வன உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த உயிரியல் பூங்காவுக்கு, சென்னை மக்கள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டுக்கு, 20 லட்சம் பேர் பார்வையாளர்களாக வந்து செல்கின்றனர். இங்கு வன உயிரினங்களை பொதுமக்கள் நேரடியாக பார்த்து செல்வதுடன், பல்வேறு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இங்கு, '7டி' காட்சிக்கூடம் அமைக்கப்பட்டது. திரையில் தெரியும் காட்சியில் பார்வையாளர்கள் பங்கேற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த கூடம் அமைந்துள்ளது. இதில் தற்போது, குறிப்பிட்ட கார்ட்டூன் படங்கள் '7டி' முறையில் காட்சிப்படுத்தப்படுகிறது. இதில் வன விலங்குகள் சார்ந்த படங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளை, உயிரியல் பூங்கா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், யானை, புலி, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகளை, பார்வையாளர்கள் தொட்டு பார்த்தது போன்ற உணர்வை கொடுக்கும் வகையில், 'விர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் மெய்நிகர் காட்சிக்கூடம் அமைக்கப்பட உள்ளது. முதல் முறையாக, 360 டிகிரியில் திரைகளுடன் அமைக்கப்படுவதால் விலங்குகளுக்கு பக்கத்தில் சென்று அவற்றை தொட்டு பார்த்தது போன்ற உணர்வை பார்வையாளர்கள் பெற முடியும். இதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளதாக, உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண் சிங்கம்
'புவனா' உயிரிழப்பு
வண்டலுார் உயிரியல் பூங்காவில், 147 ஏக்கர் பரப்பளவு அடர்ந்த காட்டுப் பகுதியில் சிங்கங்களை அருகே சென்று கண்டு ரசிக்கும், 'லயன் சபாரி' பயன்பாட்டில் உள்ளது. இதை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதியுடைய வாகனங்களில், லயன் சபாரி இருப்பிடத்திற்கு சென்று, அருகே வரும் சிங்கங்களை பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். அங்கு, ஆறு சிங்கங்கள் உள்ளன. இதில், இரண்டு சிங்கங்கள், பார்வையாளர்கள் கண்டு ரசிக்க காட்டுப்பகுதியில் விடப்படும். மற்ற நான்கு, கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், இங்கு பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயதுடைய பெண் சிங்கம், உடல்நிலை பாதிக்கப்பட்டு, நேற்று இறந்தது. பூங்கா நிர்வாகம், சிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தது.