மூதாட்டியிடம் கத்தி முனையில் பணம் பறித்த பெண் கைது
கொரட்டூர்,மூதாட்டியிடம் கத்தி முனையில் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார். பாடி, சீனிவாச நகர், பெரியார் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராம் பாய், 75. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க, மூதாட்டி ராம் பாய் அப்பகுதியில் உள்ள கடைக்கு நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர், ராம் பாயின் கையில் இருந்த பர்சை பறிக்க முயன்றுள்ளார். ராம் பாய் பர்சை விடாமல் பிடித்துக்கொள்ள, அப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, பர்சை பறித்து தப்பினார். இது குறித்து, கொரட்டூர் போலீசார் விசாரித்தனர். இதில், மூதாட்டியிடம் பணம் பறித்தது, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த தேவி, 45, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.