5 வயது சிறுமியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்த வாலிபர் கைது
மணலி புதுநகர்,மணலி புதுநகரில், 5 வயது சிறுமியை கடத்தி, வீட்டில் அடைத்து வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில், நேற்று முன்தினம் த.வெ.க., தலைவர் விஜயின் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இதை வாங்க சென்ற அதே பகுதியைச் சேர்ந்த, 5 வயது சிறுமி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மணலி புதுநகர் காவல் நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, அதே பகுதியைச் சேர்ந்த முரளி, 23, என்பவர், சிறுமியை கடத்தி தன் வீட்டிற்குள் அழைத்து சென்று, அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் சிறுமியை மீட்டனர். போலீசாரை கண்டதும் முரளி அங்கிருந்து தப்பி ஓடினார்.இது குறித்து மணலிபுதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, அம்பத்துாரில் பதுங்கி இருந்த முரளியை நேற்று கைது செய்தனர். சிறுமியை கடத்தியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.