| ADDED : ஜூலை 11, 2011 09:49 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் ரேஷன் அரிசி கடத்தி பிடிபட்ட 140
வாகனங்களை ஏலம் விடுவதற்காக அதிகாரிகள் தயார் நிலையில்
வைத்துள்ளனர்.குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார் பாலகிருஷ்ணன்
கூறியதாவது: பொள்ளாச்சி தாலுகாவில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருசக்கர
வாகனங்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் அனைத்தும்
அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு உத்தரவின் பேரில்
அவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர்களும்,
ஆட்டோ மொபைல் இன்ஜினியரும் ஆய்வு செய்ய உள்ளனர். ஒரு கார், ஒரு ஆம்னி, ஒரு
லாரி உள்பட 140 வாகனங்கள் உள்ளன. வாகனங்களின் இன்ஜின் மற்றும் சேஸ்
நம்பர்களை பதிவு செய்து, அவற்றுக்கு மதிப்பீடு செய்யப்படும். அதன்பின்,
மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு ஏலம் நடத்தப்படும்.
அதற்காக பறிமுதல் வாகனங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றார்.