உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள் : பல்கலை பதிவாளர் பேச்சு

தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள் : பல்கலை பதிவாளர் பேச்சு

கோவை : ''தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள்; அதிலிருந்தே வெற்றிக்கான தகவல்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம்'' என, பாரதியார் பல்கலை பதிவாளர் திருமால்வளவன் தெரிவித்தார். சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர், பாரதியார் பல்கலை பதிவாளர் திருமால்வளவன் பேசியதாவது: இவ்வுலகில் வாழ மனிதனுக்கு அன்றாடத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் கல்வியின் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. இந்தியா எப்போதும் கல்வி பயில சிறந்த இடமாக விளங்குவதால், உலகின் பல்வேறு பல்கலைகள் இன்று இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளன. ஒரு தனி மனித வெற்றிக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. காரணம் சமுதாயத்தில் ஒரு மனிதன் தனக்கென ஒரு சரியான அடித்தளம் அமைக்கவும், பொருளாதாரம், வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொள்ளவும் இது உதவுகிறது. மக்களுக்கு கற்றல் ஒரு சிறந்த முதலீடு. கல்வி மூலம் மட்டுமே திருப்தியான வாழ்க்கை, வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

நிகழ்கால தகவல் தொழில்நுட்ப உலகம் தினமும் புதிய மாற்றங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படித்து முடித்து வெளியில் செல்வோருக்கு அதில் எண்ணற்ற சவால்கள் காத்திருக்கின்றன. அதை சமாளிக்க சுயதிறனை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள்; அதிலிருந்தே வெற்றிக்கான தகவல்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். மூன்று வருட பாடத்தில் 85 சதவீதம் பெற்று, கல்லூரியில் முதலாவதாக வந்த மாணவி ஆண்டனி பாஸ்டினாவிற்கு வெள்ளிப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. இதில், கோவை சி.எஸ்.ஐ., அமைப்பின் தலைவர் கருணாகரன், கல்லூரி முதல்வர் பியூலா ஜெயசீலி, செயலாளர் சுசீலா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை