கோவை :ஆன்லைன் மூலம், நூதன முறையில்,பெங்களூரை சேர்ந்த தம்பதியினரை கோவை வரவழைத்து, 1.17 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், தலைமறைவாக உள்ள மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு, சி.வி.ராமன் நகரைச் சேர்ந்தவர் சோம நாராயணன். இவர், மகளுக்கு ஆன்லைனில் மாப்பிள்ளை தேடினார். இந்நிலையில், சுப்பா ராயுடு என்பவர், ஆன்லைனில் சோம நாராயணனைத் தொடர்பு கொண்டு, தான் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்றும், குண்டடிபட்ட காரணத்தால் ராணுவத்தில் இருந்து விலகி, தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.தன் மகனுக்குத் திருமணம் செய்ய, ஆன்லைனில் பெண் தேடியபோது, மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தது தெரியவந்தது என்றும், தற்போது, கோவையில் உள்ளதாகவும், புறப்பட்டு வருமாறும் கூறியுள்ளார்.சுப்பா ராயுடு கூறியதை நம்பி, சோம நாராயணன் தனது மனைவி கல்யாணியுடன், கடந்த 22ம் தேதி கோவை வந்தார். ரயில்வே ஸ்டேஷனில் சுப்பா ராயுடு, சித்தார்த், வேணு உள்ளிட்டோர், அவர்களை ஒரு குடியிருப்புக்கு அழைத்துச் சென்றனர்.காலை 9.00 மணியளவில், சோம நாராயணன் மற்றும் அவரது மனைவி கல்யாணிக்கு, மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்ஸ் கொடுத்தனர். குடித்தவுடன், சோம நாராயணன், அவரது மனைவி மயக்கமடைந்து விட்டனர்.இதையடுத்து, விஜயலட்சுமி அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க செயின், ஐந்து தங்க வளையல்கள் , ஒன்பதாயிரம் ரூபாய், பட்டுப் புடவை இரண்டு உட்பட, ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.அடுத்த நாள் காலை கண் விழித்த அவர்கள், தங்க நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.போலீசார் சுப்பா ராயுடு, சித்தார்த், வேணு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.