உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு வீட்டை உள்வாடகைக்கு விட்ட அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி! ஒதுக்கீட்டை ரத்து செய்ய வீட்டு வசதி வாரியம் முடிவு

அரசு வீட்டை உள்வாடகைக்கு விட்ட அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி! ஒதுக்கீட்டை ரத்து செய்ய வீட்டு வசதி வாரியம் முடிவு

கோவை : கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் ஒதுக்கீடு பெற்ற, பொதுப்பணித்துறை இளநிலை உதவியாளர் ஒருவர், உள்வாடகைக்கு கொடுத்திருப்பது, அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது. நிபந்தனைகளை மீறியதாலும், அவ்வீட்டில் வசித்தவர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதாலும் ஒதுக்கீட்டை ரத்து செய்ய, கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.கவுண்டம்பாளையத்தில், வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது; 1,848 வீடுகள் உள்ளன. அரசு அலுவலர்களுக்கு இவ்வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதில், 'டி' பிளாக்கில் உள்ள ஒரு வீட்டை உள்வாடகைக்கு எடுத்துள்ள நபர்கள், 4ம் தேதி நள்ளிரவு, 2:15 மணிக்கு குடிபோதையில், சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். அருகாமையில் வசிப்போரை தொந்தரவு செய்யும் வகையில், மாடிப்படிகளில் தட தடவென ஏறி இறங்குவதுமாக இருந்தனர்.

விளக்கம்

குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வந்து விசாரணை நடத்தி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கவுண்டம்பாளையம் போலீசார் நேரில் வந்து, குடியிருப்பில் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட நபர்களை, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, எச்சரிக்கை செய்து அனுப்பினர். இத்தகவல், 7ம் தேதி வெளியான நமது நாளிதழின் கோவை சப்ளிமென்ட்டில், 'சித்ரா - மித்ரா' பகுதியில் பிரசுரிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம். கலெக்டர் கிராந்திகுமார் விளக்கம் கேட்டார்.அதன்பின், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், கவுண்டம்பாளையம் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 'டி' பிளாக், முதல் தளம், 21வது குடியிருப்பு, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் அரவிந்த் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தெரியவந்தது. இவர், வீட்டு வசதி வாரியத்திடம் குடியிருப்புக்கான சாவி பெறுவதற்கு அளித்துள்ள குடும்ப புகைப்படத்தில், தாயார் நவமணி - 52, அண்ணன் சதீஷ் - 31 என இருவர் இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், அந்த வீட்டில் எட்டு நபர்கள் வசித்ததாக, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர். போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒதுக்கீடுதாரர் அரவிந்த் என்பவரின் தம்பி என ஒருவர் கூறியிருக்கிறார். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கின்றனர். என்றாலும், அவர்களது வயதை காரணம் காட்டி, எச்சரிக்கை மட்டும் செய்து விட்டு, திருப்பி அனுப்பினர். அவர்கள், எங்கே சென்றார்கள் என தெரியவில்லை. ஒதுக்கீட்டுதாரர், அரசுக்கு சொந்தமான வீட்டை உள்வாடகைக்கு விட்டிருப்பது அதிகாரிகளின் கள ஆய்வில் தெரியவந்தது. அதனால், வீட்டு வசதி வாரிய நிபந்தனைப்படி, ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆய்வு

இதுகுறித்து, கோவை வீட்டு வசதி வாரிய சிறப்பு திட்ட கோட்டம் - 3 செயற்பொறியாளர் கொடுத்துள்ள அறிக்கையில், 'ஒதுக்கீடுதாரர் அரவிந்த் உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒதுக்கீட்டு உத்தரவில் தெரிவித்துள்ள நிபந்தனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உள்வாடகைக்கு விட்டிருப்போர், இறந்த பணியாளர் குடும்பத்தினர் தொடர்ந்து வசித்தல் மற்றும் பணியிட மாறுதலுக்கு பின்னரும் அனுமதியின்றி வசிப்போர் தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை, 600 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன; தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்' என கூறியுள்ளார்.

கலெக்டருக்கு அறிக்கை

வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில், 20க்கும் மேற்பட்ட வீடுகளில், 'பேச்சுலர்'கள் வசிக்கின்றனர். இதுவே பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது. அவர்கள், வீடுகளுக்கு நண்பர்களை அழைத்து வருவதோடு, இரவு நேரங்களில் மதுபானம் அருந்தி, அருகாமையில் வசிப்போரை தொந்தரவு செய்கின்றனர். குடும்பமாக இல்லாதவர்களுக்கு வீடு ஒதுக்கச் சொல்லி பரிந்துரை செய்வதை, ஒவ்வொரு அரசு துறை உயரதிகாரிகளும் கைவிட வேண்டும். எந்தெந்த வீடுகள் முறைகேடாக ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என பட்டியலிட்டு, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து, ரத்து செய்யப்படும். 'பேச்சுலர்'களுக்கு ஒதுக்கிய வீட்டை ரத்து செய்வது தொடர்பாக கலெக்டரே முடிவெடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை