பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியில் பறவைகளின் சரணாலயம் போன்றுள்ள கிருஷ்ணா குளம், பராமரிப்பின்றி இருப்பது வேதனையாக உள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு மட்டும் வைத்த பேரூராட்சி நிர்வாகம், குளத்தை துார்வாரவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர், ஜமீன்ஊத்துக்குளி - நல்லுார் ரோட்டில் உள்ள, கிருஷ்ணா குளத்தில் தேங்கும் வகையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர், ஜமீன் முத்துார், ஜலத்துார், செல்லாண்டிகவுண்டன்புதுார், ராமபட்டிணம் வழியாக பாய்ந்து, கேரளாவிற்கு செல்கிறது.கிருஷ்ணா குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், வீணாகி கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், ராமபட்டணம் பகுதியில், சின்னணை, பெரியணை என இரண்டு தடுப்பணைகளுக்கு செல்கிறது.மழை பெய்யாத காலத்தில், பொள்ளாச்சி மற்றும் வழியோர கிராமங்களின் கழிவுநீர் குளம் மற்றும் தடுப்பணைகளில் தேங்குகிறது. கழிவுநீரையும் விவசாயிகள் பயன்படுத்தி, சாகுபடி செய்கின்றனர். இது நியாயமா?
கிருஷ்ணா குளம், கழிவுநீரால் மாசுபட்ட சூழலில், பாலித்தீன் டம்ளர், உணவு பொருட்கள் அடங்கிய பாலித்தீன் கவர்களையும் அப்படியே குளத்தில் வீசிச் செல்கின்றனர்.தற்போது, குளம் முழுவதும் மண்ணை மலடாக்கும் பாலித்தீன் கழிவுகள் தேங்கியுள்ளன. இதை துார்வார வேண்டும்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.அருகில், டாஸ்மாக் மதுக்கடை உள்ளதால், அங்கு 'சரக்கு' வாங்கி வருவோர், குளக்கரையில் அமர்ந்து போதை ஏற்றிக்கொள்வதுடன், உணவு பெட்டலம், பிளாஸ்டிக் கவர்களை குளத்தினுள் வீசி செல்கின்றனர். இந்நிலையில், குளத்தை துார்வாரி பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காட்சி மாறவில்லை
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:கிருஷ்ணா குளம் பல கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், விவசாயத்துக்கு ஆதாரமாகவும் உள்ளது.பறவைகளின் சரணாலயம் எனக்கூறும் அளவுக்கு வெளிநாட்டு பறவைகளும் இங்கு வருகின்றன.ஆனால், இன்றோ குளத்தின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. இந்த குளத்தை துார்வார வேண்டும். கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.இங்கு வரும் பறவைகள், கழிவுநீர் கலந்த நீரில் தாகம் தீர்க்கின்றன. இதனால், அவற்றின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. ஆட்சிகள் மாறினாலும், இந்த குளத்தின் காட்சி மட்டும் மாறாமல் உள்ளது.இவ்வாறு, கூறினர்.
அறிவிப்பு இருக்கு; நடவடிக்கை இல்லை!
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி சார்பில், 'கிருஷ்ணா குளம் மற்றும் அணைக்கட்டு பகுதியில் கழிவுகளை கொட்டுவதால், நீர் நிலைகள் மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இந்த குளப்பகுதியில் கட்டட கழிவுகள், எவ்விதமான குப்பைகளும் கொட்டக்கூடாது. தவறும்பட்சத்தில் வாகனம் பறிமுதல் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.அறிவிப்பு மட்டும் வைத்தால் போதுமென, பேரூராட்சி நிர்வாகம் நினைத்து விட்டது போலுள்ளது. அதன்பின் எவ்வித கண்காணிப்பும் மேற்கொள்ளவில்லை.பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு நீர் நிலையை கூட பராமரிக்க, நிர்வாகம் அக்கறை காட்டாதது இயற்கை ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே, பேரூராட்சி பொறுப்பில் உள்ள நிலையில், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.