தொண்டாமுத்தூர்: தென்னமநல்லூரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், 1,032 மனுக்கள் பெறப்பட்டன.பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த உத்தரவிட்டதை ஒட்டி, தேவராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், நரசீபுரம், தென்னமநல்லூர், வெள்ளிமலைபட்டிணம் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கான, மக்களுடன் முதல்வர் முகாம் தென்னமநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.முகாமை தெற்கு ஆர்.டி.ஓ., சிவக்குமார், துவக்கி வைத்தார். 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.அதிகபட்சமாக, வருவாய்த்துறைக்கு, 576 மனுக்களும், குறைந்தபட்சமாக, தொழிலாளர் நலத்துறைக்கு, 1 மனுவும் வந்தது. சில துறைகளுக்கு, மனுக்களே வரவில்லை.நேற்றைய முகாமில், அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம், 1,032 மனுக்கள் பெறப்பட்டன. இதில், பேரூர் தாசில்தார் லாவண்யா, பி.டி.ஓ., ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள், 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.