1,208 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆனைமலை; ஆனைமலை அருகே சோதனைச்சாவடியில், 1,208 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.ஆனைமலை அருகே, மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில், எஸ்.ஐ., முருகநாதன், எஸ்.எஸ்.ஐ., கர்ணன், போலீஸ் சிவராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, பொள்ளாச்சி நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.வாகனத்தை ஓட்டி வந்த, கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த முகமது ஹாபிஸ்,39, என்பவரிடம் வாகனத்தில் என்ன உள்ளது என்பது குறித்து விசாரித்தனர்.விசாரணையின் போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகமடைந்து வாகனத்தை சோதனையிட்டனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பதையும், அவற்றை பொள்ளாச்சி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, வாகனம், 1,208 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.