கோவை;ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் ஆக்கிரமித்திருந்த, 20 சென்ட் காலி மனையானது கோர்ட் உத்தரவையடுத்து, மாநகராட்சி வசம் நேற்று கொண்டுவரப்பட்டது.மாநகராட்சி, 72வது வார்டு, ஆர்.எஸ்.புரம், பாஷ்யகாரலு தெருவில் இரண்டு மனைகளாக பிரிக்கப்பட்ட, 40 சென்ட் காலியிடத்தை நகராட்சியாக இருக்கும்போது தனியார் சிலர் போலி ஆவணம் தயாரித்து, ஆக்கிரமித்திருந்தனர்.இடத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைத்து, பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். ஆய்வின்போது அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரியவந்தது. இதையடுத்து, இடத்தை மீட்பதற்கு கோவை முன்சிப் கோர்ட்டில் வழக்கு நடந்துவந்தது.இந்நிலையில், 20 சென்ட் பரப்பளவு கொண்ட, ஒரு மனையை மாநகராட்சி வசம் ஒப்படைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. கேட்டின் சாவி, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து நேற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமார் கூறியதாவது:நகராட்சியாக இருந்தபோது ஒரு மனை, 20 சென்ட் என இரண்டு மனைகளை(40 சென்ட்) போலி ஆவணம் தயார் செய்து, தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இதுதொடர்பாக இரு வழக்குகள் நடந்துவந்தன. அதில், ஒரு வழக்கின் தீர்ப்பானது, மாநகராட்சிக்கு சாதகமாக ஒரு மாதத்துக்கு முன்பு வழங்கப்பட்டது.வழக்கு இருந்ததால், காம்பவுண்ட் சுவரின் 'கேட்' பூட்டப்பட்டிருந்தது. தீர்ப்பையடுத்து, பூட்டின் சாவி மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இன்று(நேற்று) ரூ.10 கோடி மதிப்புடைய, 20 சென்ட் பரப்பளவுடைய காலி மனை, மாநகராட்சி வசம் கொண்டு வரப்பட்டது. கமிஷனரிடம் அனுமதி பெற்று பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். மற்றொரு வழக்கு நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.ரூ.10 கோடி மதிப்பிலான காலி மனையை மீட்பதற்கு வாதாடிய மாநகராட்சி வழக்கறிஞர்களை, மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டினர்.