உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 4 நாள் டெக்ஸ் பேர்: ரூ.1,500 கோடி வர்த்தகம் எதிர்பார்ப்பு

கோவையில் 4 நாள் டெக்ஸ் பேர்: ரூ.1,500 கோடி வர்த்தகம் எதிர்பார்ப்பு

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில், 'டெக்ஸ் பேர்' என்கிற ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் துணை கருவிகளின் சர்வதேச கண்காட்சி, 21 முதல், 24 வரை நான்கு நாட்கள், கோவையில் நடத்தப்படுகிறது; 1,500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.'சைமா' தலைவர் சுந்தரராமன் நிருபர்களிடம் கூறியதாவது:ஜவுளி ஆலைகள் ஒவ்வொரு ஆண்டும் மொத்த விற்பனையில், 2.5 சதவீதம் முதல், 3 சதவீதம் வரை உதிரிபாகங்கள் வாங்கவும், 4 சதவீதம் முதல், 6 சதவீதம் வரை ஜவுளி இயந்திரங்களை புதுப்பிக்கவும் செலவிடுகின்றன. புதிதாக வாங்க நினைக்கும் இயந்திரங்களை தீர்மானிக்கவும், புதிய இயந்திரங்கள் வாங்க முடிவு செய்வதற்கும் இக்கண்காட்சி, சரியான இடமாக இருக்கும்.கண்காட்சியில், 240 ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகிப்பாளர்கள், 260 ஸ்டால்களில் தங்கள் பொருட்களை வைக்க உள்ளனர். இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக, உள்நாட்டிலேயே குறைந்த விலையில் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வோரை ஊக்குவிப்பது, முக்கிய நோக்கம்.அதேநேரம், தமிழகம் மட்டுமின்றி குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகிப்பாளர்கள், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த இருக்கின்றனர். சுவிட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஜப்பான், சீனாவை சேர்ந்த தயாரிப்பாளர்களும் பங்கேற்கின்றனர். நான்கு நாட்களில் ஒரு லட்சம் பேர் பார்வையிடுவர்; 1,500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.கண்காட்சி துவக்க விழா, 21ம் தேதி காலை, 10:00 மணிக்கு 'கொடிசியா' வளாகத்தில் நடைபெறுகிறது. கோவை எம்.பி., ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர் சீனிவாசன் தலைமை வகிக்கிறார். இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராகேஷ் மெஹ்ரா, கவுரவ விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். 21 முதல், 24 வரை தினமும் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை பார்வையிடலாம்; நுழைவு கட்டணம், பதிவு கட்டணம் ஏதுமில்லை. கூடுதல் விபரங்களுக்கு, www.simatexfair.org என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.துணை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் செல்வராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ