உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் குழந்தையை திருமணம் செய்தால் பத்தாண்டுகள் சிறை ஏழு மாதங்களில் 79 எப்.ஐ.ஆர்., பதிவு

பெண் குழந்தையை திருமணம் செய்தால் பத்தாண்டுகள் சிறை ஏழு மாதங்களில் 79 எப்.ஐ.ஆர்., பதிவு

கோவை:கோவை மாவட்டத்தில் கடந்த, ஜன., முதல் தற்போது வரை குழந்தை திருமண விவகாரத்தில், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், 79 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அம்பிகா தெரிவித்தார். குழந்தை திருமண தடைச்சட்டத்தை பொறுத்தவரையில், 18 வயது பூர்த்தியாகாத பெண்களுக்கும், 21 வயது பூர்த்தியாகாத ஆணுக்கும் திருமணம் செய்துவைக்க இயலாது. கடந்த காலங்களில், வறுமை, சமூக சூழல் போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து, குழந்தை திருமணம் நடப்பது சாதாரணமான ஒன்றாக இருந்தது. அதன் பின், பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டும் குழந்தை திருமண தடை அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்பம், கல்வி வளர்ச்சி காரணமாக பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், பதின்பருவ வயது புரிதல் இன்றி, காதல் என்ற பெயரில் நடக்கும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். கோவையில், 2021ல் 146, 2022ல் 109, 2023ல் 82, 24ம் ஆண்டில் தற்போது வரை 79 குழந்தை திருமணங்கள் புகாரின் பேரில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அம்பிகா கூறியதாவது: குழந்தை திருமணம் குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 55 புகார்கள் திருமணம் நடந்த பின் புகார் வரப்பெற்றது. 24 திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். இதில், 79 புகார்கள் மீதும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. விழிப்புணர்வு இன்றி திருமணம் செய்துகொண்டு, போக்சோ வழக்கில் சிக்கி பத்தாண்டுகள் சிறை செல்லும் நிலையுள்ளது. ஆகவே பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெரும்பாலும், 15 முதல் 17 வயதுள்ள மாணவிகளே குழந்தை திருமணத்தில் தவறான முடிவுகளை எடுத்து பாதிக்கப்படுகின்றனர். கோவையில், ஆனைமலை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிக குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன. தற்போது, 79 பதிவாகியுள்ள புகாரில், 22 புகார் வெளிமாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து தங்கியவர்கள். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். கோவையில், ஆனைமலை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிக குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன. தற்போது, 79 பதிவாகியுள்ள புகாரில், 22 புகார் வெளிமாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து தங்கியவர்கள்.

'மாணவர்களுக்கு

கவுன்சிலிங் தேவை'கோவை மாவட்ட நீதிக்குழும உறுப்பினர் மற்றும் உளவியல் ஆலோசகர் மகேஷ் கூறுகையில், ''மொபைல் போன் பயன்பாடு காரணமாக, பதின்பருவங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. குழந்தை திருமணம் குறித்து, மாணவர்களுக்கு கட்டாயம் உளவியல் ரீதியான கவுன்சிலிங் அவசியம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ